மாஸ்கோ – கடந்த மாதம் எகிப்தில் 224 பயணிகளுடன் ரஷ்ய விமானம் வெடித்துச் சிதறியதற்குக் காரணம் வெடிகுண்டு தான் என்றும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தான் அந்த சதிச் செயலை செய்துள்ளனர் என்றும் ‘த கிரெம்லின்’ உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 31-ம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான கூட்டத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டது.
ரஷ்யாவின் எஃப்எஸ்பி பாதுகாப்புச் சேவையின் தலைவர் அலெக்ஸ்சாண்டர் போர்ட்னிகோவ், விளாடிமிர் புடினிடம் அளித்த விளக்கத்தில், வினாத்தில் இருந்த வெடிகுண்டு தான் நடுவானில் வெடித்துச் சிதறி விமானத்தை வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“எங்களுடைய நிபுணர்களின் ஆய்வின் படி, 1 கிலோகிராம் எடையுள்ள டிஎன்டி வெடிபொருள் அடங்கிய நாட்டுவெடிகுண்டு, நடுவானில் வெடித்து விமானத்தை சிதறச் செய்துள்ளது. அதனால் தான் விமானத்தின் பாகங்கள் அதிக தூரமான இடங்களில் சிதறியுள்ளன.” என்று போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்.