சென்னை: அண்மையில் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா யார் பக்கம் என்ற கேள்வியும் பிரச்சாரங்களில் ஒரு முக்கிய அங்கமாக இடம் பெற்றது.
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் அரசியல் கட்சி, ஜெயலலிதாவின் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட காரணத்தால், சரத்குமார் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகப் பார்க்கப்பட்டார். இதனால், ஜெயலலிதாவின் ஆசிகளும், ஆதரவும் நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்குத்தான் கிடைக்கும் என்ற பேச்சு கிளம்பியது.
அத்துடன் ஜெயலலிதா-சரத்குமார் நெருக்கத்தை அறிந்துதான் சிவகுமாரின் மகனான கார்த்திக்கை பொருளாளராக விஷால் அணியில் களமிறக்கினார்கள் என்ற ஒரு பார்வையும் திரையுலகத்தினரிடையே நிலவியது.
சிவகுமார் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் ஜெயலலிதா என்பதும், வழக்கத்திற்கு மாறாக அவரது இல்லத் திருமணங்களுக்கு மட்டும் நேரடியாக வருகை தந்தவர் ஜெயலலிதா என்பதும் திரையுலகில் அனைவரும் அறிந்த ஒன்று.
இதனால்தான் சிவகுமாரின் மகனை அணியில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டால், பிரச்சனை ஏதும் வந்தால் ஜெயலலிதாவை அணுக வசதியாக இருக்கும் என விஷால் தரப்பினர் கருதினார்கள் என்றும் கூறப்படுகின்றது.
எனினும் அதற்கெல்லாம் இடங் கொடுக்காமல் இறுதிவரை கண்ணியமாக இருந்து நடிகர் சங்கத் தேர்தலிலிருந்து ஒதுங்கி, நடுநிலை வகித்ததோடு, கட்சிக்காரர்கள் யாரும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கட்டளையையும் பிறப்பித்தார் ஜெயலலிதா.
சரத்குமாரைத் தவிர்த்த ஜெயலலிதா…
தேர்தல் நடைபெற்ற போது, காவல் துறை பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, தேர்தல் முறையாக நடப்பதை உறுதி செய்தார் ஜெயலலிதா.
இத்தகைய சூழ்நிலையில்தான் நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணி வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் நவம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, தேர்தல் சுமுகமாக நடைபெற உதவியதற்காக நன்றி தெரிவித்தனர்.
நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கும் புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மீண்டும் சரத்குமாருடன் கூட்டணி வைப்பாரா ஜெயலலிதா?
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளோடு இணக்கமானப் போக்கைக் கொண்டிருக்க முனைந்திருக்கும் ஜெயலலிதா, அடுத்தாண்டு நடைபெறப் போகும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் சரத்குமாருடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சரத்குமார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்ததும், அவரோடு கூட்டணி வைப்பதற்கான காரணங்களுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
அந்தக் காரணம் இப்போது இல்லை என்பதால், ஜெயலலிதா இனியும் சரத்குமாருடன் கூட்டணி வைப்பாரா அல்லது கழட்டி விடுவாரா என்பதை தமிழக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
-செல்லியல் தொகுப்பு