நியூ யார்க்- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பாபி ஜிண்டால் வெளியிட்டுள்ள அறிவிப்பு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பொது நோக்கர்கள் இது எதிர்பார்த்த ஒன்று என்றே தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் பதவியைப் பொருத்தவரை ‘ஒபாமாவிற்கு முன்’, ‘ஒபாமாவிற்கு பின்’ என மிக எளிதாக பிரித்து விடலாம். இது ஒபாமாவின் செயல்பாடுகளின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகும். இனவெறி சர்ச்சைகள் அதிகம் உள்ள அமெரிக்காவில், ஒபாமா ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் பேராதரவுடன் அதிபரானார். மக்கள் மனதில் ஏற்பட்ட இந்த மாற்றம் 10 வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், பாபி ஜிண்டால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் பெரிய செல்வாக்கு பெற முடியாமல் போட்டியில் இருந்து விலக நேர்ந்தது என்று சிலர் கூறுவதை ஏற்க முடியாது. ஜிண்டாலின் இந்த தோல்விக்கு அவர் கடைபிடித்த குறுகிய கொள்கைகளே காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தியர் என்ற அடையாளத்தை வெறுத்தவர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி ஜிண்டால், அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டபோதே மிகத் தெளிவாக அவர் கூறிய வார்த்தைகள் இந்தியர்களை முகம் சுழிக்க வைத்தது.
“என்னை இந்திய-அமெரிக்கர் என்று அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. எனது பெற்றோர் அதற்காக அமெரிக்கா வரவில்லை” என்று வெளிப்படையாகவே கூறினார். இது அங்கு இருக்கும் இந்திய வம்சாவளியினரை பெரிதும் காயப்படுத்தியது
மதவாதப் போக்கு
ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஜிண்டால் மத ரீதியாக அணுகியது அவருக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. பிறப்பால் இந்து மதத்தைச் சேர்ந்த ஜிண்டால், பருவ வயதில் கிறித்துவ மதத்திற்கு மாறியவர். ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஜிண்டால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த எதிர்ப்புக்கான காரணம் பற்றி அவர் கூறுகையில், “கிறிஸ்தவ நம்பிக்கைகளின் படி இத்தகைய திருமணத்தை நான் எதிர்க்கிறேன்” என்று கூறினார்.
அதிபர் வேட்பாளருக்கு நிற்கத் தகுதி உள்ள ஒருவர் உச்ச நீதிமன்றத்தை, மதத்தின் காரணமாக விமர்சிப்பது அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியது. மற்றொரு முக்கிய அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் இத்தகைய திருமணத்திற்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் பதவியில் ஜொலிக்கவில்லை
லூசியானா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஜிண்டால், அந்த பதவிக்கான குறைந்தபட்ச மக்கள் எதிர்பார்ப்பைக் கூட பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. அதனால் மக்கள் மத்தியில் அவர் நிர்வாகத் திறமை இல்லாதவராகவே பார்க்கப்பட்டார்.
பழமைவாதியிலும் பழமைவாதி
சமூக ரீதியான விவகாரங்கள் அனைத்திலும் பாபி ஜிண்டால் மிகவும் பழமைவாதியாகவே இருக்கிறார் என்ற பேச்சு அவர் சார்ந்த கட்சியினராலே பெரிதும் விமர்சிக்கப்பட்டது. தான் சார்ந்த கட்சிலேயே பெரிய அளவிலான செல்வாக்கை பெற முடியாத ஜிண்டால், இன்று மிகச் சிறந்த வாய்ப்பினை இழந்த அடையாளங்களில் ஒன்றாக உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது ஒரு நாட்டின் தேர்தலாக இல்லாமல், உலக நாடுகளில் பெரிய அளவில் எதிரொலிக்கும் தேர்தலாகவே உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஜிண்டால் கைகளில் இருந்தும் தனது பிற்போக்கு சிந்தனைகளால் அதனை அவர் இழந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
– சுரேஷ்