வாஷிங்டன், ஜனவரி 17 – அமெரிக்கர் என்று அழைப்பதையே விரும்புகிறேன், இந்திய-அமெரிக்கர் என்று பிரிக்கப்படுவதை விரும்பவில்லை என சமீபத்தில் லூசியானா மாகாண ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் நிரந்தரமாக வசிப்பவர்களை இந்திய வம்சாவளியினர் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த நடைமுறை அமெரிக்காவிலும் உள்ளது.
அங்கு நிரந்தரமாக குடியேறிய இந்தியர்களை, இந்திய-அமெரிக்கர் என்று அடையாளப்படுத்துவர். லூசியானா ஆளுநரான பாபி ஜிண்டாலும், இந்தியப் பெற்றோருக்கு பிறந்தவர்.
தற்போது அவர் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், பத்திரிக்கைகள் அவரை இந்திய-அமெரிக்கர் என்று குறிப்பிட்டு இருந்தன. இந்நிலையில் அவ்வாறு குறிப்பிடுவது தனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
“எனது பெற்றோர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்ததுவிட்டனர். அவர்கள் வந்தது அமெரிக்கர்களாக வாழ்வதற்குத்தான். இந்திய-அமெரிக்கர்களாக வாழ்வதற்கு அல்ல. இணைப்புக்குறியீடு உள்ள அமெரிக்கனாக நான் இருக்க விரும்பவில்லை”.
“அமெரிக்கா போன்ற பல கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கும் இடத்தில், இன பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அடையாளங்கள் பெரும் சங்கடத்தை உண்டாக்குகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “எனது பெற்றோர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவிலேயே இருந்திருப்பர். அவர்கள் இந்தியாவை நேசித்தார்கள். ஆனால் அதிக வாய்ப்புகள் மற்றும் சுதந்திரத்திற்காக அமெரிக்காவிற்கு வந்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டை வலுப்படுத்தவும் இன வேற்றுமைகளை களைந்து அனைவரையும் ஒருங்கிணைக்க பாபி ஜிண்டால் இவ்வாறு கூறியுள்ளதாக லூசியானா அரசு வட்டாரங்கள் கூறிகின்றன.