ஸ்ரீரங்கம், ஜனவரி 17 – காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்,அங்கு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலிதாவின் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழக்க நேர்ந்தது.
இதையடுத்து தமிழகத்தின் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த ஒ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு 10 காவல் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 2 பறக்கும் படைகள் தேர்தல் எர்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக நகர காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு சீ.வளர்மதியை அதிமுக வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த தேர்தல் ஏற்பாடுகளை கவனிக்க 29 மாநில அமைச்சர்கள் உட்பட 50 பேர் அதிமுக சார்பில் களப்பணிகளை கவனிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் திமுக வேட்பாளர் ஆனந்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.