ஸ்ரீரங்கம், பிப்ரவரி 16 – ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 1,25,100 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. முன்னிலையில் இருந்தது.
ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையிலும் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி அதிக ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்ததால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.
சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வீட்டு முன்பு திரண்டு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இதேபோல் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பும் திரளாக நின்ற அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள். அமைச்சர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 1,25,110 வாக்குகளும், திமுக வேட்பாளர் என். ஆனந்த், 46,089 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாதுரை 4242 வாக்குகள் பெற்றுள்ளனர்.