கோலாலம்பூர்- சுலு சுல்தானின் மகளுடன் தாம் புகைப்படம் எடுத்துக் கொண்டதன் பின்னணியில் எந்தவித தவறான உள்நோக்கமும் இல்லை என பிகேஆர் உதவித் தலைவர் நூருல் ஈசா அன்வார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவின் இறையாண்மையை தாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகக் கூறப்படுவது மிகக் கடுமையான திரிக்கப்பட்ட குற்றச்சாட்டு என அவர் கூறியுள்ளார்.
“தெற்கு பிலிப்பைன்சில் மலேசியா முன்னெடுத்துள்ள அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்தேன். மலேசியாவின் ஓர் அங்கமாக சபா உள்ளது என்பதையும், நாட்டின் இறையாண்மையை தற்காப்பதற்கான எனது ஆதரவையும் மீண்டும் புலப்படுத்துகிறேன். நவம்பர் 9ஆம் தேதி பிலிப்பைன்ஸ் அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் நோக்கத்துடன் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவுடன் அங்கு சென்றிருந்தேன். அங்கு முன்னாள் ஆளுநர் ஹெர்மிலான்டோ மண்டனாஸ், படான்காஸ் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருடன் சுலு சுல்தான் மகள் ஜேசலையும் சந்தித்தேன்” என்றும் நூருல் விளக்கமளித்துள்ளார்.
சர்ச்சைக்குள்ளான அந்தப் புகைப்படம்…
“சந்திக்க வேண்டியவர்களின் பட்டியலை நாங்கள் தீர்மானிக்கவில்லை. பிலிப்பைன்ஸ் விவகாரங்களுக்கான மன்றம் (council on Philippine affairs) மற்றும் ஜனநாயகத்துக்கான ஆசிய மையம், மணிலா மேயர் அலுவலம், பிலிப்பைன்ஸ் துணை அதிபர் அலுவலகம் ஆகியவைதான் முடிவு செய்தன. மாறாக பி.கே.ஆர். கட்சி, இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை,” என நூருல் ஈசா தமது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சபாவில் 200 ‘சுலு படைகளை’ அனுப்பி ஊடுருவும் முயற்சியில் இறங்கிய சுலு சுல்தான் ஜமாலுல் கிராம் 3-ன் மகள் தான் இந்த ஜேசல் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.