கோலாலம்பூர் – இன்று தனது வருகையின் ஒரு பகுதியாக பத்துமலையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 3.00 மணியளவில் வரலாற்றுபூர்வ வருகையை மேற்கொள்வார்.
இதுவரை மலேசியாவுக்கு வருகை மேற்கொண்ட இந்தியப் பிரதமர்கள் யாரும் அண்மையக் காலத்தில் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தந்ததில்லை என்றும், மோடியின் வருகையே முதல் இந்தியப் பிரதமரின் பத்துமலை வருகையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
மோடியின் வருகைக்காக – அவருக்கு சிறப்பான வரவேற்பு – பூரண கும்ப மரியாதைகளுடன் நல்குவதற்காக – அனைத்து ஏற்பாடுகளையும் தாங்கள் செய்துள்ளதாக ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா (படம்) தெரிவித்துள்ளார்.
மோடியின் பத்துமலை வருகை அவரது மலேசியப் பயணத்தின் நிறைவு அங்கமாகும். பத்துமலை வருகைக்குப் பின்னர் மோடி அங்கிருந்து நேராக விமானம் மூலம் சிங்கப்பூர் செல்கின்றார்.