கோலாலம்பூர் – சூலு இளவரசி எனக் கூறிக் கொள்ளும் ஜேசல் கிராம் என்பவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக நானும் நுருல் இசாவும் வருந்துகின்றோம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா (படம்) கூறியுள்ளதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“இருப்பினும், பிலிப்பைன்ஸ் சென்றபோது நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டபோது, சூலு இளவரசியுடன்தான் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றோம் என எங்களுக்குத் தெரியாது” என்றும் தியான் சுவா மேலும் கூறினார்.
வழக்கமாக மாநாடுகளில் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பலர் முன்வருவார்கள், அதுதான் எங்களுக்கும் நடந்தது என்று கூறியுள்ள தியான் சுவா, “ஏற்கனவே, நுருல் இசா இது குறித்து பாதிப்படைந்த குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். எனவே, சில அரசியல் தரப்புகள் இன்னும் ஏன் இதனைப் பெரிதுபடுத்துகின்றன என்பது எங்களுக்குத் தெரியவில்லை” என்றும் கூறினார்.
இது குறித்து காவல் துறை விசாரணை நடைபெறுவது குறித்தும் தாங்கள் கவலைப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
முன்பாக, துணைப் பிரதமரான அகமட் சாஹிட் “தியான் சுவாதான் இந்த சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றார். சூலு சுல்தான் அலுவலகத்தை அவர்தான் இந்த சந்திப்புக்காகத் தொடர்பு கொண்டார்” என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
நூருலையும், தியான் சுவாவையும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ள அந்த புகைப்படம் இதுதான்….