புது டெல்லி – தொழில் அதிபர் விஜய் மல்லையா ஒரு மோசடிப் பேர்வழி என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
கிங்பிஷர் நிறுவனத்திற்காக 17 வங்கிகள் ரூபாய் 7,500 கோடியை கடனாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அளித்தன. ஆரம்பத்தில் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்தாலும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான இழப்பு காரணமாக அந்நிறுவனம் முழுமையாக முடக்கப்பட்டது. இந்நிலையில் கடன் கொடுத்த வங்கிகள் தொடர்ந்து கிங்பிஷரிடம் கடனை திருப்பிக் கேட்டு வந்தன.
இதுவரை சொற்பத் தொகை மட்டுமே கொடுத்த மல்லையா, மீதித் தொகைக்கு மொத்தமாக கையை விரித்துவிட்டார். வங்கிகளும் தலைகீழாய் நின்று கேட்டுப் பார்த்தும், மல்லையாவிடன் பதில் கிடைக்கவே இல்லை. இதனால் வெறுத்துப் போன, யுனைடெட் வங்கி அவரை கடந்த செப்டம்பர் மாதம் ‘வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்’ (Wilful Defaulter) என அறிவித்தது.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்பிஐ) தற்போது அவரை மோசடியாளராக அறிவித்துள்ளது. இருந்தாலும் மனிதர் இதற்கும் அசைந்து கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.