புதுடில்லி – மைக்ரோசோஃப்ட் நிறுவனத் தலைவரும், உலகம் முழுமையிலும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு அறப்பணிகளை ஆற்றி வருபவருமான பில் கேட்ஸ் இன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரருமான பில் கேட்ஸ் தூய்மையான சக்தி உருவாக்கம், நிதித் துறை விவகாரங்கள், கழிவுகள் நிர்வாகம், சுகாதாரம், சத்துணவுத் திட்டங்கள் ஆகிய அம்சங்கள் குறித்து மோடியிடம் விவாதித்தார்.
மறுபயனீட்டு முறையிலான சக்தி உருவாக்கம் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் பணிகள் குறித்துப் பாராட்டு தெரிவித்த பில் கேட்ஸ் தூய்மையான மறுபயனீட்டு சக்தி உருவாக்கம் குறைந்த செலவினத்தில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் மோடியுடனான சந்திப்பின்போது வலியுறுத்தினார்.
நிதி நிர்வாகத் துறையில் அபரிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பில் கேட்ஸ், இந்தத் துறையில் தனது பங்களிப்பையும் வழங்குவதற்கு உறுதியளித்தார். தற்போதுள்ள அஞ்சல் அலுவலக உட்கட்டமைப்பைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வங்கிகளாக அவை செயல்படும் நடைமுறைகளும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன.
புதிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதிலும் அவற்றின் பயன்பாட்டிலும் இந்தியாவின் பணிகளைப் பாராட்டிய பில் கேட்ஸ் மோடியின் தூய்மை இந்தியா பிரச்சாரம் குறித்தும், கழிவு நிர்வாகம் தொடர்பில் நிலைமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசாங்க முயற்சிகள் குறித்தும் பில் கேட்ஸ் மோடியுடன் விரிவாக விவாதித்துள்ளார்.