சிப்பாங் – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ), தனியாக கைவிடப்பட்டு நிற்கும் மூன்று போயிங் இரக விமானங்கள் தங்களுடையது இல்லையென மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவ்விமானங்கள் யாருடையது? என அறிந்து கொள்ள, விமான நிலைய நிர்வாகம் பத்திரிக்கை ஒன்றில் விளம்பரம் செய்துள்ளது.
அந்த விளம்பரத்தில், கேஎல்ஐஏ – வை நிர்வகிக்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், தெரிவித்துள்ள தகவலில், விமான நிலையத்தில் நிற்கும் 3 போயிங் 747-200F இரக விமானங்களை அதன் உரிமையாளர், இன்னும் 14 நாட்களுக்குள் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
14 நாட்களுக்குள் வந்து அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், அந்த விமானங்களை விற்பனை செய்வதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் தங்களுக்கு உரிமை உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.