Home Featured நாடு வெளியே இருக்கும் மஇகா கிளைகள் கட்சிக்குள் திரும்ப இறுதி வாய்ப்பு! சுப்ரா அறிவிப்பு!

வெளியே இருக்கும் மஇகா கிளைகள் கட்சிக்குள் திரும்ப இறுதி வாய்ப்பு! சுப்ரா அறிவிப்பு!

778
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகாவுக்கு வெளியே இருக்கும் சுமார் 800 கிளைகள் மீண்டும் கட்சிக்குள் திரும்புவதற்கு இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற மஇகா மத்திய செயலவையின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

Subramaniam-MICகடந்த செப்டம்பரில் நடைபெற்ற மஇகா மறு-தேர்தல்களில், இந்த 800 கிளைகள் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தலைமையை ஏற்று அந்தத் தேர்தல்களில் பங்கு பெறாமல் புறக்கணித்தன.

இருப்பினும் எஞ்சிய 2,000க்கும் மேற்பட்ட கிளைகள் வெற்றிகரமாக மறு-தேர்தல்களை நடத்தி முடிக்க, தொடர்ந்து  தொகுதிகள் மற்றும் தேசிய நிலையிலான தேர்தல்களும் மஇகாவில் நடந்து முடிந்தன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கட்சியில் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் கட்சிக்கு வெளியில் நிற்கும் இந்த சகோதர மஇகா கிளைகள் மீண்டும் கட்சிக்குள் இணைவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டாக்டர் சுப்ரா கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, பெரும்பாலான கிளைகள் மீண்டும் கட்சிக்குள் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி கட்சிக்கு வெளியில் இருக்கும் இந்த கிளைகளுக்கான மறு தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது பழனிவேல் தரப்பு என்று கூறிக் கொள்ளும் அணியினரிடையே கடுமையான பிளவுகள் ஏற்படும் என்றும் ஒரு சாரார் மீண்டும் கட்சிக்குத் திரும்புவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில், டான்ஸ்ரீ பாலா-ஏ.கே.தரப்பினர் சங்கப் பதிவகம் குறித்த சில மின்னஞ்சல் கடிதங்களை முன்வைத்து எழுப்பியுள்ள விவகாரத்தினால் அவர்கள் தரப்பில் செயல்படும் பல மஇகா கிளைகள் மிகுந்த அதிருப்தி கொண்டுள்ளன.

“முடிந்து போன விவகாரத்தை மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு இனி நடக்க வேண்டிய அரசியல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் – கட்சிக்குத் திரும்பும் வழிவகைகளை ஆராய வேண்டும்” என்பதுதான் தற்போது பழனிவேல் தரப்பில் செயல்படும் பெரும்பாலான கிளைகளின் நோக்கமாக இருக்கின்றது.

அதே வேளையில், பழனிவேலுவின் தலைமைத்துவமே வேண்டாம் என்று சோதிநாதன்-டான்ஸ்ரீ பாலா-ராமலிங்கம் அணியினர் முடிவு செய்துள்ளதால், பழனிவேலுவின் தலைமைத்துவத்தை மட்டுமே நம்பி வந்த பல கிளைகள் மீண்டும் சுப்ராவின் தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் கட்சிக்குள் திரும்பவும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.