கோலாலம்பூர் – தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் நஜிப் என்னை அணுகி, என்ன வேண்டும்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார் என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
“நான் அதை உண்மை என்று எண்ணி, அதனால் நாட்டில் சில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவரிடம் பேசினேன். பிறகு தான் நான் உணர்ந்தேன், அவர் எனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்கிறார் என்று. அப்போது தானே நான் 1எம்டிபி விவகாரத்தை எழுப்ப மாட்டேன்” என்று மகாதீர் நேற்று இரவு தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இழந்தது மிகப் பெரிய தொகை, அதை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“என்னை நன்றாகக் கவனிப்பதால், அரசாங்கத்தின் பில்லியன் கணக்கான பண இழப்பை நான் கண்டுகொள்ளாமல் இருந்துவிடமாட்டேன். அதனால் தான் நான் தொடர்ந்து 1எம்டிபி விவகாரத்தை எழுப்பி வருகின்றேன். நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6பில்லியன் ரிங்கிட் திடீரெனத் தோன்றியுள்ளதே அதை விட என்ன என்ன வேண்டும்.” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.