கோலாலம்பூர் – சென்னை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டிருக்கும் ஏராளமான மலேசியர்கள் மற்றும் தமிழகத்தில் பயிலும் மலேசிய மாணவர்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை சென்னையிலுள்ள மலேசியத் தூதரகக் கிளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நோக்கத்திற்காக உதவும் பொருட்டு இன்று மஇகா தலைவர்களின் மூலம் நன்கொடைகள் திரட்டப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகையான 3 இலட்சம் ரிங்கிட் வெள்ள நிவாரண நிதியாக சென்னையிலுள்ள மலேசியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று அறிவித்தார்.
நேற்று மாலை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற அவசர மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது டாக்டர் சுப்ரா இந்தத் தகவலை வெளியிட்டார்.
மலேசிய அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஏற்கனவே 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண உதவித் தொகையாக அறிவித்துள்ளார். இந்தத் தொகை தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதியில் சேர்ப்பிக்கப்படும்.