Home Featured நாடு பழனிவேல் தரப்பினரின் “மத்திய செயற்குழு” இன்று கூடி விவாதித்தது!

பழனிவேல் தரப்பினரின் “மத்திய செயற்குழு” இன்று கூடி விவாதித்தது!

689
0
SHARE
Ad

palanivel_787566198கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து வெளியே நிற்கும் கிளைகளைப் பிரதிநிதிக்கும் முன்னாள் தேசியத் தலைவர் பழனிவேல் தரப்பினர் இன்று கோலாலம்பூரில் தங்களின் “மத்திய செயற்குழுக்” கூட்டத்தை நடத்தினர்.

இந்தக் கூட்டத்திற்கு டத்தோ எஸ்.சோதிநாதனும், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும் கூட்டாகத் தலைமை வகித்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் பழனிவேல் மீண்டும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் கூட்டம் முடிந்த பின்னர் ஒரு குழுவினர் பழனிவேலுவைச் சந்தித்து, கூட்டத்தின் விவாதங்கள் குறித்து விளக்கமளித்தனர் என பழனிவேல் தரப்பினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

டிசம்பர் 19ஆம் தேதி வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்

Dr Subra - MIC PRESIDENTஇன்றைய கூட்டத்தின் முக்கிய அம்சமாக விவாதிக்கப்பட்டது எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருப்பதாக மஇகா தலைமையகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் மஇகாவுக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் விவகாரம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில், எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி, கட்சிக்கு வெளியே இருக்கும் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியம் அறிவித்திருந்தார்.

இருப்பினும் இந்த வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொள்வதா இல்லையா என்ற இறுதி முடிவை இன்றைய கூட்டத்தில் பழனிவேல் தரப்பினர் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

கட்சிக்கு வெளியே இருக்கும் கிளைகள் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் தேசிய முன்னணி பிரதிநிதிகளுடனும், மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவுடனும் தொடர்ந்து நடத்தப்படுவதாகவும், அந்த பேச்சுவார்த்தைகள் ஒரு சுமுகமான முடிவுக்கு வருவதற்கு முன்னால் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கலில் கலந்து  கொள்வதில்லை என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

MIC-Logo-Featureஇந்நிலையில், எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கல், கட்சிக்கு வெளியே நிற்கும் கிளைகள் மீண்டும் கட்சிக்கு நேரடியாகத் திரும்புவதற்கான இறுதி வாய்ப்பாகப் பார்க்கப்படுகின்றது.

அடுத்த 2016ஆம் ஆண்டு மஇகா அமைப்பு விதிகளின்படி தேர்தல் ஆண்டு என்பதால், இந்த மாதம் டிசம்பருக்குள்  வெளியே இருக்கும் கிளைகள் கட்சிக்குள் திரும்ப வேண்டும் என்றும் இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், அடுத்த ஆண்டில் அவர்கள் கட்சிக்குத் திரும்ப முடியாமலே போய்விடும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் எத்தனை மஇகா கிளைகள் எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நேரடியாக வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கும் என்பது மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

அல்லது, பழனிவேல் தரப்பினர் டிசம்பர் 19ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறுவதில்லை என முடிவெடுத்தால், அந்த முடிவைப் பின்பற்றி எத்தனை கிளைகள் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒதுங்கி இருப்பார்கள்-

எத்தனை கிளைகள் அந்த முடிவையும் மீறி நேரடியாகத் தாங்களாகவே,  வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறுவார்கள் –

என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் தற்போது மஇகா வட்டாரங்களில் பெருகி வருகின்றது.