சென்னை,மார்ச் 14-இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், அமெரிக்கா ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கக் கோரியும், தமிழகத்தில் மார்ச் 12ம் தேதி நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி அடைந்திருப்பதாக தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
டெசோ அமைப்பு அழைப்பு விடுத்திருந்த இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி மிகப் பெரிய வெற்றியடைந்ததாக டெசோ அமைப்பின் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மார்ச் 12ம் தேதி தமிழகம் முழுவதும் அரசியல் சார்பற்ற முறையில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளுடன் பொது வேலைநிறுத்தம் நடத்துவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்காகத்தான் இந்தப் பொது வேலைநிறுத்தம் என்பதையே மறந்துவிட்டு, ஏதோ ‘‘டெசோ” இயக்கத்திற்கும், அதன் ஒரு அங்கமாக உள்ள திமுகவுக்கும் மட்டும் உரிமையுடைய வேலை நிறுத்தம் என்பதைப் போலக் கருதிக்கொண்டு, தமிழகத்திலே உள்ள ஒரு சிலர் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை என்று அறிக்கை விட்டார்கள்.
வேறு சிலர் மறைமுகமாக தங்கள் வழக்கறிஞர் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தார்கள். அரசு தலைமை வழக்கறிஞரும் வேலை நிறுத்தத்திற்கு எதிராகக் கடுமையாக வாதாடினார்.
சிலர் இதனைத் திசை திருப்பும் முயற்சி என்றெல்லாம் ஊருக்கு முந்திக் கொண்டு குறுக்குச்சால் ஓட்டி குளிர்காய முயற்சித்தார்கள்.
ஆனால் அவர்களையும் மீறி, தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தமிழின உணர்வோடு பொங்கியெழுந்து இந்தப் பொது வேலை நிறுத்தத்தை மிகக் பெரிய வெற்றியாக ஆக்கித் தந்திருக்கிறார்கள்.
தொழிலாளர்கள் போதிய அளவிற்குப் பணிக்கு வராத நிலையிலே, தமிழக அரசு குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு பஸ்களை ஓட்டுவதற்கு முயற்சி எடுத்த போது கழகத் தோழர்கள் மறியல் செய்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கைதானவர்கள் பற்றி அறிந்து கொண்டேன்.தமிழகம் முழுவதிலும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஒரு சிலருக்கு சிற்சில சங்கடங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லாம் தமிழினத்திற்காக இந்தச் சங்கடங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
டெசோ வேலை நிறுத்தம் தொடர்பில் ஸ்டாலின் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர் .