Home Featured தமிழ் நாடு தமிழக வெள்ளம்: இறுதி நிலவரச் செய்திகள்!

தமிழக வெள்ளம்: இறுதி நிலவரச் செய்திகள்!

664
0
SHARE
Ad

Flood Alertசென்னை: தமிழகத்தின் வெள்ள நிலவரங்கள் தொடர்பான இன்று திங்கட்கிழமை காலை வரையிலான, இறுதி நிலவரச் செய்திகள் – சில வரிகளில்!

  • தமிழகத்துக்கான கல்வித் தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்க, முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம்
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
  • சென்னையில் 29 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
  • மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாம்களுக்கும், வெள்ள பாதிப்பினால் ஏற்பட்ட மன அழற்சியிலிருந்து மீள, ‘கவுன்சிலிங்’ எனப்படும், தன்முனைப்புத் தூண்டல் ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, வெள்ளம் பாதித்த முடிச்சூர், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர், தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்கும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.
  • வெங்கையா நாயுடு அறிவிப்பின்படி, கனமழையால் உயிரிழந்தவர்களுக்கு மாநில அரசு தரும் ரூ. 4 லட்சம் நிதியுதவியுடன், பிரதமரின் நிதியுதவி ரூ. 2 லட்சம் சேர்த்து தரப்படும். குடிசைகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும். சென்னை நகரின் மறுசீரமைப்பு பணிகளுக்காக, நகர்ப்புற வளர்ச்சி குழுமம், கூடுதல் நிதியை வழங்க உள்ளது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுகுறித்தும் பரிசீலிக்கப்படும்.
  • அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • ‘செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. நேற்று தமிழகம் வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புக்கான உண்மையான காரணத்தை ஆராய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றும் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் போவதாகவும் கூறியுள்ளார்.
  • தமிழகத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த 8 தனியார் விமானங்களுக்கு அவற்றின் உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி வரை இழப்பீடு கோருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது