நியூ யார்க் – உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் யாஹூ, கடந்த சில வருடங்களாகவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மரிஸா மேயர்(படம்), எப்படியும் நிறுவனத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்பிவிடுவார் என நம்பிக்கையுடன் காத்து இருந்த பங்குதாரர்கள், தற்போது மரிஸாவிற்கு எதிராக திரும்பி உள்ளனர்.
இனியும் மரிஸாவை நம்பி காத்திருக்க முடியாது என அதிப்ருதி தெரிவித்துள்ள அவர்கள், அவரை தலைமைப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு, புதிய தலைமையை ஏற்படுத்த வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும், பணியாளர்களின் எண்ணிக்கையில், 75 சதவீதம் பேரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும், தற்போது பணியாளர்களின் உணவிற்காக செலவு செய்து வருவதையும் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஸ்ப்ரிங்ஓவல், கேன்யன் கேபிடல் ஆகிய இரு நிறுவனகள் தான் மற்ற பங்குதாரர்களையும் இணைத்து இத்தகைய அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனால், இது தொடர்பான இறுதி முடிவை யாஹூ இன்னும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், பங்குதாரர்களின் நெருக்கடி அதிகமானால், மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.