கோலாலம்பூர் – தன் இருப்பைக் காட்ட வேண்டிய கட்டாயம் யாஹூ நிறுவனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. மொத்த நிறுவனமே மிகக் கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அந்நிறுவனத்திற்கான தற்போதய ஒரே ஆறுதல் யாஹூ மெயில் பயன்பாடு தான்.
எப்படியும் மீண்டு எழ வேண்டும் என்ற உறுதியுடன் யாஹூ தனது மெயில் சேவையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி, தனது செயலிக்கு மறுவடிவம் கொடுத்து பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கூகுளின் ஜிமெயில் சேவையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு இணையாக, புதிய பயன்பாடுகளை புகுத்தி ஒரு படி மேலேயும் யாஹூ மெயில் சென்றுள்ளது.
கடவுச்சொற்களுக்கு மாற்று வழி, ஒரே சமயத்தில் ஜிமெயில், அவுட்லுக் உட்பட பல்வேறு மின்னஞ்சல் கணக்குகளை யாஹூ மூலமே கையாளுதல் போன்ற பல வசதிகள் யாஹூவில் மேம்படுத்தப்பட்டு இருப்பது ஏற்கனவே நாம் பார்த்த ஒன்று தான். என்றாலும், புதிதாக நீண்ட மெயில் பட்டியலை விரைவாக பார்க்கவும் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் ஸ்வைப் கன்ட்ரோல் (Swipe Control) வசதி, பல குறுஞ்செய்திகளை ஒரே நேரத்தில் அழிப்பதற்கும், நகர்த்துவதற்குமான வசதி போன்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த யாஹூ மெயில் செயலியை, ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்தோ அல்லது கூகுளின் பிளே ஸ்டோரில் இருந்தோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.