புது டெல்லி – கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டம் இயற்றத் தயாராக இருப்பதாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அந்த பிரமாணப் பத்திரத்தில், ”நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, இனி குணப்படுத்தவே முடியாது என்று அறிந்த நிலையிலும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, வழங்கப்படும் சிகிச்சையை நிறுத்தி, அவரை உயிரிழக்கச் செய்யும் கருணைக் கொலை தொடர்பாக சட்டம் இயற்றத் தயாராக இருக்கிறோம். ஆனால், இது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் இருப்பதால் தற்போது சட்டம் இயற்ற முடியவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவு தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், ”மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை முதல் 2015-ம் ஆண்டு ஜூன் வரை, கருணைக் கொலை தொடர்பாக பல்வேறு விவாதங்களை மேற்கொண்டு, கருணைக் கொலைச் சட்டம் இயற்றுவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.”
“மேலும், சட்ட அமைச்சகத்துடனும் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவைகளின் அடிப்படையில்தான் கருணைக் கொலைச் சட்டம் இயற்ற தற்போது அரசு தயாராக இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.