கோலாலம்பூர் – கிளந்தானில் வேப்பிங் என்றழைக்கப்படும் மின்சிகரெட் விற்பனை செய்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மலேசியாவில் வேப்பிங் விற்பனைக்காக கைது செய்யப்படும் முதல் நபர் அவர் தான் என நம்பப்படுகின்றது.
காரணம், அரசாங்கம் இன்னும் இது போன்ற சட்டத்திற்குப் புறம்பாக நிக்கோடின் பொருட்களை விற்பனை செய்வதற்கு தகுந்த சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவில்லை.
இது குறித்து உத்துசான் மலேசியா வெளியிட்டுள்ள செய்தியில் முகமட் அசாஹர் சஃபி (வயது 27) என்ற நபர் கடந்த நவம்பர் 5-ம் தேதி, கிளந்தானில் அங்குள்ள கடைத்தெரு ஒன்றில் 518 மில்லி லிட்டர் நிக்கோடின் திரவத்தை முறையான அனுமதி இன்றி விற்பனை செய்து கொண்டிருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அந்நபர் கோத்தா பாரு அமர்வு நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.
நச்சு சட்டம் 1952, பிரிவு 9(1)-ன் கீழ் தடை செய்யப்பட்ட விஷப் பொருட்களை விற்பனை செய்ததற்காகவும் அல்லது அதை வைத்திருந்த குற்றத்திற்காகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3000 ரிங்கிட் அபராதமோ அல்லது 1 வருட சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.