Home Featured நாடு பிறை செல்வ விநாயகர் ஆலயத்தை பினாங்கு அறப்பணி வாரியம் திரும்ப ஒப்படைக்குமா? ஜெ.தினகரன் கேட்கிறார்.

பிறை செல்வ விநாயகர் ஆலயத்தை பினாங்கு அறப்பணி வாரியம் திரும்ப ஒப்படைக்குமா? ஜெ.தினகரன் கேட்கிறார்.

904
0
SHARE
Ad

Thinagaran J Penang Photoஜோர்ஜ் டவுன் – மிகுந்த சர்ச்சைகளுக்குள்ளாகி, பலத்த கண்டனங்களைச் சந்தித்து வரும் பினாங்கு அறப்பணி வாரியத்தின் மீது மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், பினாங்கு மாநில மஇகா பிரமுகருமான ஜெ.தினகரன் (படம்) “பிறை செல்வ விநாயகர் ஆலயத்தை பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறந்த தலைமைத்துவம் ஒன்றிடம் ஒப்படைக்க பினாங்கு இந்து அறப்பணி வாரியம் முன்வருமா? அதற்காக வாரியத் தலைவரும் துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி துணை நிற்பாரா?” என்ற கேள்விகளை முன்வைத்திருக்கின்றார்.

“பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் செயல்பாடுகளை குற்றம் சொல்லி அவர்களை சாட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் சமுதாயத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல்களை செய்ய வேண்டாம் என்பதை மட்டும் தான் வலியுறுத்துகிறோம். பிறை செல்வ விநாயகர் ஆலயத்தை கைப்பற்றியிருக்கும் அறப்பணி வாரியம், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த ஆலயத்திற்கு சரியான தலைமை அமைந்தால் திரும்ப ஒப்படைக்குமா? இதற்கு பேராசிரியர் இராமசாமி துணை நிற்பாரா?” என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜெ.தினகரன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ramasamy“சமுதாயத்தை முன்னிலைப்படுத்தி பேராசிரியர் இராமசாமி அவர்கள் தனது தொகுதியை சார்ந்த பிறை செல்வ விநாயகர் ஆலய விவகாரத்தை கவனிப்பாரா? உண்மையில் பார்க்கப்போனால் இந்த ஆலயம் பொதுமக்கள் மற்றும் தேசிய அரசாங்கத்தின் உதவியோடு சுற்றுவட்டார பொதுமக்களின் வழிபாட்டிற்காக கட்டப்பட்டது. இதனை எளிதாக காரணம் காட்டி அறப்பணி வாரியம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல” என்றும் தினகரன்  சுட்டிக் காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அந்த ஆலயம் சரியான நிர்வாகத்திடம் இல்லை என அறப்பணி வாரியம் நினைத்தால் பேராசிரியர் இராமசாமி தலையிட்டு அந்த ஆலயத்திற்கு இடைக்கால பொறுப்பேற்று பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். மீண்டும் பேச்சுவார்த்தைகளின் வழி பொதுமக்கள் சார்ந்த சரியான நிர்வாகத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக எடுத்த எடுப்பில் ஆலயத்தை கைப்பற்றுவதில் குறியாக இருந்தால் அது சரியானதொரு நடவடிக்கையா? சாதாரணமாகவே இந்த ஆலய பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தியிருக்கலாம்” என்றும் தினகரன் மேலும் தெரிவித்தார்.

பத்து கவான் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயப் பிரச்சனை

“அதே போல் தான் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்துகவான் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய விவகாரத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தன்மூப்பாக நடந்து கொண்டது. இரண்டு தரப்பு நிர்வாகத்தினால் பூட்டு போட்டு நீதிமன்றம் வரை சென்று சமுதாயத்திற்கு பெரிய மனக்கசப்பையும் ஏற்படுத்திவிட்டார்கள். இடைக்கால தலைமையை வகுத்து பேச்சுவார்த்தை நடத்தி சுற்றுவட்டார பொதுமக்கள் சார்ந்த தலைமைக்கு வழி வகுக்காமல் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஆலயத்தை கைப்பற்றியது சரியல்ல” என்றும் தினகரன் தனது அறிக்கையில் வாதிட்டுள்ளார்.

“எனது நிலைப்பாட்டில் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எந்த மாதிரியான பிரச்சனையாக இருந்தாலும் அதனை தீர்க்க முனைப்பு காட்ட வேண்டுமே தவிர எடுத்தோம், கவிழ்த்தோம் என்றால் அது சமுதாயத்தை பாதிக்கும். எதுவாயினும் பேராசிரியர் இராமசாமி இந்த ஆலயம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனமாக, சமுதாயத்தின் உணர்வுகளில் விளையாடாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும், மீண்டும் ஆலயங்களை கைப்பற்றும் நோக்கத்தில் மட்டும் செயல்பட வேண்டாம். மேலும் இந்த இரண்டு ஆலய பிரச்சனை சார்ந்து புதிய நிர்வாகத்திடம் ஆலயத்தை திரும்ப ஒப்படைக்க அறப்பணி வாரியம் தயாராக இருக்குமா?” எனவும் தினகரன் தமதறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.