Home Featured நாடு மகாதீருக்கு எதிரான கட்டுரை: மேலும் அவரை சினம் கொள்ளச் செய்யுமா?

மகாதீருக்கு எதிரான கட்டுரை: மேலும் அவரை சினம் கொள்ளச் செய்யுமா?

484
0
SHARE
Ad

najib mahathirகோலாலம்பூர் – மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தொடர்ந்து வசை பாடி வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், நஜிப் பதவி விலகும் வரை விடுவதாகத் தெரியவில்லை.

“நஜிப் பதவி விலகினால் அது அனைவராலும், ஏற்றுக் கொள்ளப்படும் மற்றும் அப்போது தான் நஜிப் ஒரு பண்புள்ள மனிதராக மதிக்கப்படுவார்” என்று நேற்று மகாதீர் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது அம்னோவில், அதன் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும், துணைத்தலைவரான டான்ஸ்ரீ மொகிதியின் யாசினுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையைத் தான் எல்லோரும் உற்று நோக்குகிறார்கள். ஆனால் அடுத்த பொதுத்தேர்தலில் இதே தலைமைத்துவத்துடன் கட்சி இறங்குமானால், தோல்வியடையும் வாய்ப்பு இருக்கும் அபாயத்தை பலரும் உணரவில்லை என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “நிதி எங்கே சென்றது? என்பதை அம்னோ தலைவர் விளக்கமளித்து, வந்த நன்கொடையை கட்சிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ திரும்பக் கொடுக்க வேண்டும். அல்லது அதற்குப் பதிலாகப் பதவி விலக வேண்டும் என்ற இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது” என்றும் நஜிப் மீதான 2.6 பில்லியன் நன்கொடை குற்றச்சாட்டிற்கு மகாதீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நஜிப் அரசாங்கத்தைக் கவிழ்க்க சில முன்னணித் தொழிலதிபர்கள் முயற்சி செய்து வருவதாகவும்,அவர்கள் அதற்காக மில்லியன் கணக்கில் செலவிடுவதாகவும் கூறப்படும் ஒரு கட்டுரை குறித்து மலேசிய காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

அண்மையில் மகாதீரையும், முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினையும் லண்டனில் சந்தித்த அத்தொழிலதிபர்கள், இது குறித்துத் திட்டமிட்டதாகவும் கடந்த வாரம் ‘மலேசியா டுடே’-வில் வெளியான அந்தக் கட்டுரை கூறுகின்றது.

லண்டனில் நடந்த இச்சந்திப்பில் 2 மில்லியன் ரிங்கிட் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் அந்தக் கட்டுரை கூறுகின்றது.

இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு மகாதீரை மேலும் சினம் கொள்ளச் செய்து நஜிப்புக்கு எதிராக தனது நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.