பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14 – மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாண விவகாரம் தொடர்பாக விசாரிக்க, சுதந்திர விசாரணைக்குழு ஒன்றை அமைப்பது குறித்து மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் (பார் கவுன்சில்) 67 வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
அப்பொதுக் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள ரெனைசன்ஸ் விடுதியில் நடைபெறவுள்ளது.
தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கையும், அவரது மனைவி ரோஸ்மாவையும் சம்பந்தப்படுத்தி, தான் பதிவு செய்து இருந்த முதல் சத்தியப்பிரமாணத்தில் இருந்து பின்வாங்கினார்.
அவ்வாறு அவர் பின் வாங்குவதற்கு முக்கிய கருவியாகச் செயல்பட்டது தீபக் ஜெய்கிஷன் என்ற வணிகரும், வழக்கறிஞர் செசில் ஆப்ரஹாம் என்பதும் அதன் பின் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ராபர்ட் பாங் என்பவர் செசில் ஆப்ரஹாம் தான் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைத் தயாரித்தவர் என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.
வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் அந்த பொதுக்கூட்டத்தில் சுதந்திர விசாரணைக்குழு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இவ்வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.