சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தலைமையகம் உள்ளது. இதன் தலைவராக செப் பிளாட்டர் 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது தலைமையில் நடந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில், போட்டியை நடத்தும் நாடுகளை தேர்வு செய்தல், ஒளிபரப்பு உரிமை வழங்குதல் போன்றவற்றில் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது.
சுவிட்சர்லாந்து காவல்துறை, ஊழல் புகாரில் ஈடுபட்ட பிபா நிர்வாகிகளை கைது செய்தது. இறுதியாக, பிளாட்டரும் நடந்த தவறுக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார்.
இந்நிலையில், இந்த ஊழல் புகார் குறித்து விசாரித்த பிபா நன்னடத்தைக் குழு, செப் பிளாட்டர் மற்றும் பிளாட்டினிக்கு 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்தக் காலத்தில் சம்பந்தப்பட்டவர்கள், கால்பந்து தொடர்பான எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
இதற்கிடையே, புதிய தலைவருக்கான தேர்தல், 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.