Home Featured நாடு “ஐசெகவுடன் பாஸ் இணைந்திருந்தபோது பேசாத இராமசாமி இப்போது மஇகாவை வம்புக்கிழுப்பதேன்?” சுந்தர் சுப்ரமணியம் கேள்வி!

“ஐசெகவுடன் பாஸ் இணைந்திருந்தபோது பேசாத இராமசாமி இப்போது மஇகாவை வம்புக்கிழுப்பதேன்?” சுந்தர் சுப்ரமணியம் கேள்வி!

547
0
SHARE
Ad

SUNTER 2கோலாலம்பூர் – அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான இணைப்பு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என கூறியிருந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அந்த அறிக்கையில் பாஸ்-அம்னோ இணைப்புக்கு வரவேற்பு கூறுவதன் மூலம் இந்தியர்களை கேவலப்படுத்தாதீர்கள் என அவர் டாக்டர் சுப்ராவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடியாக இராமசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள மஇகாவின் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் சுந்தர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் “முன்பு பக்காத்தான் கூட்டணியில் ஜசெகவும், பாஸ் கட்சியும் ஒன்றாக இணைந்திருந்த வேளையில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி ஏன் தைரியமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

சுந்தர் இன்று விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் மஇகா மற்றும் தேசிய முன்னணி விவகாரங்களில் இராமசாமி மீண்டும் ஒருமுறை மூக்கை நுழைத்திருப்பதற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பினாங்கு மாநில இந்தியர் விவகாரங்களை முதலில் கவனியுங்கள்”

p.ramasamy“பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வரான பேராசிரியர் இராமசாமி, அம்மாநில இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தவிர, மற்ற விஷயங்களில் எல்லாம் அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. பினாங்கில் உள்ள இந்தியர்களின் வருந்தத்தக்க நிலை தொடர்பாக ஏராளமான புகார்கள் உள்ளன. ஆனால் அந்தப் புகார்களின் மீது இராமசாமி கவனம் செலுத்துவதில்லை. மாறாக மஇகா தலைவர்களை வம்புக்கு இழுப்பதிலும், இதர சில்லறை அரசியல் விவகாரங்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி முனைப்பாக உள்ளார்,” என சுந்தர் கூறியுள்ளார்.

கம்போங் புவா பாலாவை இந்திய சமுதாயம் இன்னும் மறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சுந்தர், பத்து கவான் மாரியம்மன் கோவில் தொடர்பில் இந்து அறவாரியம் எழுப்பிய சர்ச்சை மற்றும் இதர விவகாரங்கள் குறித்து பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

“பினாங்கில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நலன் குறித்து விவாதிக்க, தமிழகத்தில் இருந்து சில அரசியல் பிரமுகர்களை அழைத்து வந்து கருத்தரங்குகளை, கலந்துரையாடல்களை நடத்துவதில் ஆர்வம் காட்டும் இராமசாமி, உள்ளூர் இந்தியச் சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளூர் விவகாரங்களைக் கண்டு கொள்வதில்லை. இந்த விவகாரங்களைக் கவனிப்பதற்காகவே அவரை மாநில சட்டமன்றத்துக்கு மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்பதுடன், அவரது கட்சி அவரைத் துணை முதல்வராகவும் நியமித்துள்ளது” என்பதையும் இராமசாமிக்கு நினைவுபடுத்தினார்.

“உங்கள் கட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் – எங்கள் கட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்”

Subra-press reporters-Optometrics Conf“சங்கப் பதிவகத்துக்கும் மஇகாவுக்கும் இடையேயான விவகாரம் குறித்து அண்மையில் அறிக்கை வெளியிட்ட இராமசாமி, தற்போது அம்னோ-பாஸ் இடையேயான கூட்டணி தொடர்பாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தைச் சாடியுள்ளார்.
ஆனால், பினாங்கு துணை முதல்வராகப் பதவி வகித்த போதிலும், அவரது சொந்தக் கட்சியான ஜசெகவின் மத்திய செயலவைத் தேர்தலில் இராமசாமியால் வெற்றிபெற முடியவில்லை. அவரது கட்சியில் அவருக்குள்ள செல்வாக்கு இவ்வளவுதான். அவருக்குப் பின்னால், பினாங்கு மாநில இந்தியர் விவகாரங்கள் தொடர்பில் தற்போது ஏராளமான சர்ச்சைகளும், புகார்களும் குவிந்துள்ளன. எனவே அவை குறித்து அவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பிற கட்சிகளின் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் முன்னர் அவர் தமது சொந்தக் கட்சியின் நிலையை – சொந்த மாநிலத்தின் நிலையைக் கவனிக்க வேண்டும் என்றும் இராமசாமிக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்” என்று சுந்தர் சுப்ரமணியம் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலம் வரை ஜசெகவும், பாஸ் கட்சியும் மிக அருமையானதொரு உறவைப் பேணி வந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள சுந்தர், இதுகுறித்து அச்சமயம் இராமசாமி ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலாங்கூரில் பாஸ் கட்சியுடன் பிகேஆர் இன்னும் அரசியல் உறவைப் பேணி வருவதாகவும், இந்நிலையில் அதற்காக சிலாங்கூரில் உள்ள கூட்டணியை விட்டு ஜசெக வெளியேறத் தயாரா? என்றும் இராமசாமிக்கு சவால் விடுத்துள்ளார் சுந்தர் சுப்ரமணியம்.

“பக்காத்தானில் இருந்தால் உங்களுக்கு நண்பன் – அம்னோவுடன் இணைந்தால் மட்டும் எதிரியா?’

DAP-Pas-flags“பக்காத்தானில் நீடிக்கும் வரை பாஸ் கட்சியானது ஜசெகவுக்கு நண்பன். ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்து பாஸ் வெளியேறியதும் அது எதிரிக்கட்சி என இராமசாமியால் முத்திரை குத்தப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற பிகேஆரின் ஆண்டுப் பொதுப்பேரவையில் கூட பாஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுபற்றி இராமசாமி மூச்சுகூட விடவில்லை. அதற்கு காரணமென்ன?” என்றும் சுந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் அம்னோ – பாஸ் உறவு குறித்து மட்டும் இராமசாமி திடீரென கவலை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் புதிய உறவால் 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தானுக்கும், பக்கத்தான் ஹரப்பானுக்கும் பெரிய அடி விழும் என்பதே அவரது இக்கவலைக்கான காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பில் மஇகா தேசியத் தலைவர் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் படித்துப் பார்க்குமாறு இராமசாமியைக் கேட்டுக் கொள்கின்றேன். பாஸ் கட்சியின் கொள்கைகள் குறித்த தமது கவலையை டாக்டர் சுப்ரமணியம் தெளிவாக முன்வைத்துள்ளார். மேலும் தேசிய முன்னணியின் உச்ச மன்றக் கூட்டத்தில், பாஸ் கட்சி குறித்த மஇகாவின் கவலைகளை எழுப்ப இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்” என்றும் சுந்தர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“அம்னோவுக்கும்-மஇகாவுக்கும் இடையில் காலந்தோறும் சகோதரத்துவம்”

MIC-logo“இத்தனை ஆண்டுகாலமாக மஇகாவின் விசுவாசமான சகோதரனாக அம்னோ செயல்பட்டு வந்துள்ளது. பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவம் மற்றும் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் மூலமாக இந்திய சமுதாயம் நிறைய ஆதாயமடைந்துள்ளோம். ஆனால் பக்கத்தான் கூட்டணி உறுப்பினர்களைப் போல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கும்போது ஒரு பாட்டைப் பாடுவதும் பின்னர் விவாகரத்து என்று வந்து விட்டால் பாட்டின் மெட்டையே மாற்றிப் போட்டு வேறு விதமாகப் பாடும் பழக்கம் மஇகாவுக்கு இல்லை. தேசிய முன்னணியில் நிலவும் நீண்ட கால சகோதரத்துவம் காரணமாக சோதனையான காலங்களையெல்லாம் நாங்கள் கடந்து வந்திருக்கிறோம். அதேபோல் அம்னோ – பாஸ் கூட்டணி ஏற்படுமாயின், அது தொடர்பாக எழக்கூடிய அனைத்து விவகாரங்களையும் நல்ல முறையில் கடந்து வருவோம்” என்றும் சுந்தர் தெரிவித்துள்ளார்.

“அம்னோவுடனான உறவை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என எங்கள் கட்சியின் தலைமைக்கு நன்கு தெரியும். அம்னோவுடன் பாஸ் கைகோர்த்தாலும் கூட, மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் தனிச்சுதந்திரத்தையும் எங்கள் கட்சி உறுதி செய்யும்” என தெரிவித்துள்ள சுந்தர்,

“எனவே அம்னோ – பாஸ் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே, அதுகுறித்து இராமசாமி கருத்து தெரிவிக்க வேண்டாம், கவலையடைய வேண்டாம் என்றும், அப்பேச்சுவார்த்தையின் முடிவு பற்றி அறிந்து கொள்ள அனைவரும் காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில், பினாங்கு இந்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், பினாங்கு இந்து அறவாரியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் இராமசாமி கவனம் செலுத்த வேண்டும்” என்றும் சுந்தர் அறிவுறுத்தி உள்ளார்.

“இந்தியச் சமுதாயம் மற்றும் மஇகா தொடர்பான விவகாரங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்” என்றும் சுந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.