Home Featured நாடு மஇகா அதிரடி முடிவுகள்: இரமணன் நீக்கம்-பழனிவேல் தரப்பினருடன் இனி பேச்சு வார்த்தை இல்லை-தேவமணியைத் தாக்கியவர்கள் மீது...

மஇகா அதிரடி முடிவுகள்: இரமணன் நீக்கம்-பழனிவேல் தரப்பினருடன் இனி பேச்சு வார்த்தை இல்லை-தேவமணியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்!

891
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – புதன்கிழமை மாலை 5 மணியளவில் கூடிய மஇகாவின் மத்திய செயற்குழு அதிரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முக்கியமானதாக மஇகா புக்கிட் பிந்தாங் தொகுதித் தலைவரும், முன்னாள் மஇகா தலைமைப் பொருளாளருமான டத்தோ ஆர்.இரமணனின் நீக்கம் அமைகின்றது.

இரமணன் கட்சியிலிருந்து நிரந்தர நீக்கம்

இரமணன் கட்சியிலிருந்து தேசியத் தலைவரால் நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அண்மையக் காலங்களின் இரமணன் (படம்) விடுத்து வந்த பத்திரிக்கை அறிக்கைகள், அவரது நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்கின்றார்.

datuk-ramanan-micஇனி அவர் 14 நாட்களுக்குள் மத்திய செயலவைக்கு தனது உறுப்பிய நீக்கம் குறித்து விளக்கம் கொடுத்து, மேல் முறையீடு செய்யலாம். மத்திய செயற்குழுவின் முடிவே இறுதியானதாகக் கருதப்படும்.

பழனிவேல் தரப்பினரோடு இனி பேச்சு வார்த்தை கிடையாது

அதே வேளையில், பழனிவேல் தரப்பினராகச் செயல்படும் மஇகா கிளைகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு மீண்டும் கட்சியில் வந்து இணைவதற்கு அவர்களுக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், உண்மையாக நடந்து கொள்ளாமல், குளறுபடிகள் செய்வதிலேயே குறியாக இருப்பதால், அவர்களோடு இனி பேச்சுவார்த்தைகள் நடத்தப் போவதில்லை என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்தார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை மஇகா தலைமையகத்திற்கு வந்த பழனிவேல் தரப்பினர் நடந்து கொண்ட விதம் – கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தாக்கப்பட்ட சம்பவம் – ஆகியவற்றின் அடிப்படையிலும் அவர்களுடனான பேச்சு வார்த்தைகளை இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு மத்திய செயலவை வந்ததாகவும் டாக்டர் சுப்ரா அறிவித்துள்ளார்.

தேவமணியைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை தேவை

sk-devamany-jan17-300x202கடந்த வியாழக்கிழமை கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தாக்கப்பட்ட சம்பவத்தை மஇகா கடுமையாகக் கருதுவதாகவும், இந்த அராஜகத்தை நடத்தியவர்கள் மீது  காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

சம்பவம் நடந்த சமயத்தில் தான் வெளிநாட்டில் இருந்ததால், தேவமணி இடைக்காலத் தேசியத் தலைவர் என்ற முறையில் மஇகா தலைமையகம் வந்த தரப்பினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும், அவர் தாக்கப்பட்டதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது உட்பட இந்த விவகாரத்தின் ஆணிவேர் வரை அடையாளம் கண்டு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சுப்ரா வலியுறுத்தியுள்ளார்.

தேவமணி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் தான் காவல் துறைத் தலைவருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது, மேல் நடவடிக்கை கண்டிப்பாகத் தேவை என அவரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் சுப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற மத்திய செயலவைக்குப் பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது டாக்டர் சுப்ரா மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.