சென்னை – எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த போதும் சரி, அரசியல் அரியணை ஏறி முதல்வர் ஆன போதும் சரி, அவருடைய நெருங்கிய வட்டத்தில் இருந்த ஒரு சிலரில் தற்போதய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒருவர். ஒருமுறை ஜெயலலிதா, தனது குருவான எம்ஜிஆரை பேட்டி எடுத்த நிகழ்வும் நடந்துள்ளது. அந்த பேட்டியின் தொகுப்பை பிரபல வார இதழ் ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த பேட்டியில், எம்ஜிஆர் தனது வாழ்வில் சந்தித்தத் பெரும் துயரம் பற்றியும், தனது தாய் குறித்தும், உச்சநிலை குறித்து மனம் திறந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில், ஜெயா கேட்ட முக்கியமான கேள்விகளையும், அதற்கு எம்ஜிஆர் அளித்த பதிலையும் கீழே காண்க:
உங்கள் சொந்த வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்த நிகழ்ச்சி எது?
ஒரு பெண் என்னை காதலித்ததுதான். தயவுசெய்து இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் கேட்க வேண்டாம்.
உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால்?
என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார்.
எப்படிச் சொல்கிறீர்கள்?
குறைந்த வருமானத்தில் இருந்தபோது எனக்கு கிடைத்த மன நிம்மதி இப்போது எனக்கு இல்லை. என்னிடம் உதவி பெறாத நிலையில் என்னை அப்போது உள்ளன்போடு நேசித்து வந்தவர்கள் என்னிடம் பல உதவிகளைப் பெற்றும் உள்ளன்போடு இப்போது நேசிப்பதில்லை. உண்மையாக சொல்கிறேன். என்னை உளமாற நேசிக்கும் உண்மையான நண்பர்கள் மிகக்குறைவு. இது எனக்கே தெரியும். இப்படிப்பட்ட நிலையில், சூழ்நிலையில் இருக்கும் என்னைப் பார்த்து என் தாயார் அனுதாபப்படாமல் சந்தோஷப்பட்டுக்கொண்டா இருப்பார்?
சினிமாவுலகில் நீங்கள், யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்கு போய்விட்டீர்கள்? நீங்கள் விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ‘நியூ எல்பின்ஸ்டன்’ தியேட்டரில் ‘இரு சகோதரர்கள்’ என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக ‘மேடைப் புலி’ என்று பட்டம் பெற்ற கே.பி.கேசவன் அவர்கள் நடித்திருந்தார். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ் பெற்றிருந்தார். அவருடன் நானும் வேறு சிலரும் இந்தப் படத்தைப் பார்க்க சென்றிருந்தோம்.
இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறிக் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான் இதைக் கண்டு திகைத்து கே.பி. கேசவன் அவர்களையே பார்த்துக் கொண் டிருந்தேன். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்றிருக்கும் அவருக்கு அருகில் நாம் அமர்ந்திருக்கிறோமே என்ற பெருமை கூட உண்டாயிற்று.
படம் முடிவதற்குள் வெளியே வந்துவிட வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். நாங்கள் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்குக்கூட சிரமமாகிவிட்டது. நான் மற்றவர்களை பிடித்துத் தள்ளி, கே.பி.கே. அவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றி, காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தேன்.
அன்று மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், சென்னை ‘நியூ குளோப்’ தியேட்டருக்கு நானும் கே.பி.கே. அவர்களும் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கப் போனோம். அப்போது நான் நடித்த ‘மர்மயோகி’ திரைப்படம் வெளிவந்து சில மாதங்களே ஆகி இருந்தன.
இடைவேளையின் போது நான் வந்திருந்ததை அறிந்த ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். எனக்கு அருகில் அதே கே.பி.கே. அவர்கள்தான் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் எங்களை சூழ்ந்தது. கே.பி.கே. அவர்கள் அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார். நான் புறப்படும் போது அவரும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராக நின்றிருந்தார். அவரது நடிப்பாற்றல் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.
கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு.