Home Featured இந்தியா மோடி அதிரடி- காபூலிலிருந்து புதுடில்லி திரும்பும் வழியில் லாகூரில் இறங்கி நவாஸ் ஷரிப்புடன் சந்திப்பு!

மோடி அதிரடி- காபூலிலிருந்து புதுடில்லி திரும்பும் வழியில் லாகூரில் இறங்கி நவாஸ் ஷரிப்புடன் சந்திப்பு!

898
0
SHARE
Ad

புதுடில்லி – வெளிநாட்டுப் பயணங்களில் பிரமிப்பூட்டும் வண்ணம், வேகத்தையும், விவேகத்தையும் காட்டி வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் அதிரடியாக ஓர் அரசியல் திருப்பத்தை அரங்கேற்றவிருக்கின்றார்.

இரஷியப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை ஆப்கானிஸ்தான் வந்து சேர்ந்த மோடி அங்குள்ள சந்திப்புகள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, புதுடில்லி திரும்புவதாக இருந்தது.

modi-nawaz sharifபுதுடில்லி திரும்பியதும், முன்னாள் பிரதமரும், முன்னாள் பாஜக தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று என்பதால், அவரது இல்லம் சென்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால், அதற்குள் மற்றொரு திருப்பமாக, ஆப்கானிஸ்தான் வருகையை முடித்துக் கொண்டு தலைநகர் காபூலில் இருந்து புறப்பட்டு புதுடில்லி திரும்பும் வழியில் லாகூரில் குறுகிய நேரத்திற்கு தரையிறங்கி, அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்புடன் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றார்.

நவாஸ் ஷரிப்புக்குப் பிறந்த நாள் வாழ்த்து

இன்று நவாஸ் ஷரிப்பின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு நேரடியாக பிறந்த நாள் வாழ்த்துகளையும் மோடி தெரிவித்துக் கொள்வார்.

ஏற்கனவே, தனது டுவிட்டர் செய்தியின் வழி நவாஸ் ஷரிப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார். தொலைபேசி வழியும் பிறந்த நாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதாக மோடி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மற்றொரு விசேஷத்திலும் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவாஷ் ஷரிப்பின் பேத்தி மெஹருன் நிசாவின் திருமண வைபவங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த திருமண வைபவக் கொண்டாட்டங்களிலும் மோடி பங்கு பெறுவார் எனக் கூறப்படுகின்றது.

இன்று பாகிஸ்தான் நேரப்படி பிற்பகலில் மோடி லாகூர் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அங்கு நவாஸ் ஷரிப்பின் சொந்த இல்லம் அமைந்திருக்கும் மிகப் பிரம்மாண்டமான தோட்டத்தில் அவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து லாகூர் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மோடியின் வித்தியாச அரசியல் அணுகுமுறை

நவாஸ் ஷரிப்புடனான மோடியின் இந்த திடீர் சந்திப்பு வித்தியாசமானதாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையப்போகின்றது.

அதோடு பாகிஸ்தானின் தந்தையாகப் போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் பிறந்த நாளும் இன்றுதான். எனவே, இந்த பிறந்த நாள் வைபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது பாகிஸ்தான் நட்புறவில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை இன்று மோடி தொடக்குகின்றார்.

பிரதமரான பிறகு, மோடியின் முதல் பாகிஸ்தான் வருகை இதுவாகும். அவரது பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு அவரது அழைப்பின் பேரில் நவாஸ் ஷரிப் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் மற்ற வெளிநாட்டு மாநாடுகளில் அவர்கள் இருவரும் சந்திப்பு நடத்தியுள்ளனர் என்ற போதிலும் மோடி பாகிஸ்தானுக்கு வருகை தந்து நவாஸ் ஷரிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.

-செல்லியல் தொகுப்பு