Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: பூலோகம் – விளையாட்டுக்குப் பின்னால் இருக்கும் வியாபாரத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது!

திரைவிமர்சனம்: பூலோகம் – விளையாட்டுக்குப் பின்னால் இருக்கும் வியாபாரத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது!

696
0
SHARE
Ad

ravi-trishaகோலாலம்பூர் – நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு ஒருவழியாக ‘பூலோகம்’ வெளியாகிவிட்டது. தாமதமாக வந்தாலும், ஹெவி வெயிட்டாகத் தான் அதன் கதையமைப்பும், காட்சிகளும் உள்ளன.

வட சென்னையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் பரம்பரை, ராசமாணிக்கம் பரம்பரை என்ற இரண்டு பரம்பரைகளுக்கு இடையே, காலங்காலமாக குத்துச்சண்டையில் பெரும் பகை இருந்து வருகின்றது.

இதைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் தொலைக்காட்சி நிறுவனரான பிரகாஷ்ராஜ், அவ்விரு குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளையும் களத்தில் இறக்கி மோதவிட்டு காசு பார்க்கிறார். தன்னுடைய சேட்டிலைட் சேனலை உலக அளவில் பிரபலமாக்கி மில்லியன் கணக்கில் சம்பாதிக்க நினைக்கும் அவர், குத்துச்சண்டைப் போட்டியில் உலகத்தையே ஆட்டி வைக்கும் சைக்கோத்தனமான அமெரிக்க பாக்சரான ஸ்டீவன் ஜார்ஜை இந்தியாவிற்கு வர வைக்கிறார்.

#TamilSchoolmychoice

உள்ளூர் போட்டி உலக அளவுப் போட்டியாக உருவெடுக்க, இந்தியா சார்பில் குத்துச்சண்டைப் போட்டியில் இறங்கும் நாட்டு வைத்தியர் பரம்பரையைச் சேர்ந்த ஜெயம்ரவி, வெள்ளையனை வென்றாரா? என்பதே கிளைமாக்ஸ்.

நடிப்பு

bhooloham-reviewபக்கா வடசென்னை இளைஞராக மாறியிருக்கும் ஜெயம்ரவி, பூலோகம் கதாப்பாத்திரத்தில் ஆஜானுபாகுவாகுவான தோற்றத்துடன் தனது வித்தியாசமான உடல்மொழியால் அசத்துகிறார். ஆனால் வடசென்னை பாஷையில் தான் ஏனோ முனைப்பு காட்டவில்லை. அதில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

ஆனால், தொட்டதற்கெல்லாம் முந்திக் கொண்டு முஷ்டி முறுக்குவதும், அங்க அசைவுகளின் மூலம் எதிரிகளை கேலி செய்வதுமாக அச்சூழலை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

அதிலும், ‘மாசானக்கொல்லையிலே’ பாடல் காட்சியில் நாக்கை மடித்து, கண்களை உருட்டி மிரட்டி அப்பப்பா.. இடைவேளையில் தொடங்கி முடிவு வரை ஜெயம்ரவியின் நடிப்பும், அவரது கட்டுடலும், ஆக்ரோஷமான குத்துச்சண்டைப் போட்டிகளும், குறிப்பாக வசனங்களும் படத்திற்கு அசுர பலம் தந்துள்ளது.

திரிஷா.. படத்தில் கொஞ்சம் கவர்ச்சிக்காகவும், கொஞ்சம் கதைக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அந்தக் கதாப்பாத்திரத்திற்கும், கதை நடக்கும் சூழலுக்கும் அவர் பொருந்தவேயில்லை.

அடுத்து படத்தில், நம்மை மிகவும் ஈர்ப்பது பிரகாஷ்ராஜ் தான். தனியார் தொலைக்காட்சி நிறுவனராக பக்கா வியாபாரியாக நடித்திருக்கிறார். பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் கார்பரேட் மூளை அப்பட்டமாகத் தெரிகின்றது.

இவர்களோடு, வில்லனாக நாதென் ஜோன்ஸ் பார்ப்பதற்கே பயமுறுத்தும் உயரமும், அசுரத்தனமான உடலமைப்பையும் கொண்டிருக்கிறார். வெறித்தனமாக அவர் சண்டையில் பாயும் போது நமக்கு அடிவயிற்றைப் பிசைகிறது.

திரைக்கதை

e20cf932-cfee-4a32-9cb8-af83ca7877b51படம் தொடங்கியவுடன் இரு பரம்பரைகள் பற்றிய அறிமுகக் காட்சிகள் வரையில் தான் சுவாரஸ்யம் இருக்கின்றது. அதன் பின்னர் இரு கோஷ்டிகளுக்கு இடையில் நடக்கும் மோதலை வைத்தே இடைவேளை வரை கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன்.

அங்கு தொய்வடையும் திரைக்கதையோடு படம் பார்க்கும் நாமும் சற்று தொய்வடைந்துவிடுகின்றோம். மோதல் காட்சிகளைத் தவிர்த்து கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம். திரிஷாவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரை அங்கு பயன்படுத்தியிருக்கலாம். அல்லது கதையோடு சேர்த்து நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.

ஆனால், இடைவேளைக்குப் பிறகு காட்சிகளில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கும் இயக்குநர், உச்சக்கட்டமாக கிளைமாக்சை நெருங்கும் கடைசி அரைமணி நேரக்காட்சிகளில் நம்மை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டுவந்துவிட்டார்.

வசனம்

jayam-ravi-in-boologamபடத்தில் குத்துச்சண்டைக்கு இணையாக ‘டிஷ்யூம்’ ‘டிஷ்யூம்’ செய்திருப்பது படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வசனங்கள் தான்.

‘இயற்கை’ பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் எழுதியுள்ள ஒவ்வொரு வசனமும் பல உண்மைகளை உரக்க பேசுகிறது.

‘வியாபாரம் சர்வதேசம்… அது எல்லை தாண்டி நம்ம சேரிக்குள்ளயும் வந்து காசு பார்க்கும்’,

‘அவன் கொரங்கு டா.. அவனை ஆட வச்சு காசு பார்க்கலாம்’,

‘ரிங்ல அவன் செத்து விழுகுற எடத்துல அந்த விளம்பரம் இருக்கணும்.ஒருவேளை அங்க மிஸ் ஆயிருச்சுன்னா ரீவைண்ட்ல ஆடியோல அந்த விளம்பரத்தை கேமரா போகஸ் பண்ணனும் ’,

‘எவ்ளோஅடி வாங்கியிருப்போம்? ஒவ்வொரு அடியையும் அவன் வியாபாரம் பண்ணி காசாக்கிட்டான்’

‘ஒன்னுக்கும் ஒதவாதவன ஒலிம்பிக்ஸ் அனுப்பி அவனத் தோக்கடிச்சு, இந்தியா தோத்திருச்சுன்னு சொல்லுவீங்க.. ஆனா எங்க சேரிக்கு வந்து பாருங்க.. எத்தனை டெண்டுல்கரு, தோனி இருக்குறாங்கன்னு தெரியும்’

போன்ற ஹெவிவெயிட் பஞ்ச் வசனங்கள் படத்தில் ஏராளம்.

ஒளிப்பதிவு & இசை

சேரிப்பகுதிகள், கார்பரேட் நிறுவனங்கள், குத்துச்சண்டைப் போட்டிகள் என எஸ்.ஆர்.சதிஸ்குமாரின் கேமரா ரவுண்ட் கட்டிப் படம் பிடித்துள்ளது.

அதேபோல், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். ஆனால் மனதில் நிற்கும் படியாக பாடல் ஒன்றும் இல்லை.

ஜெயம்ரவியின் நடிப்பு, விறுவிறுப்பான குத்துச்சண்டைப் போட்டிகள், வசனங்கள், திடீர் திருப்பங்கள் என எல்லாம் சேர்ந்து படம் நன்றாக வந்திருக்கிறது.

என்றாலும், அந்தக் கல்லூரியில் ரெப்ரியே இல்லாமல் நடத்தப்படும் திடீர் போட்டி, இறுதி நேரத்தில் போட்டியாளரை மாற்றுவது போன்ற லாஜிக்குகள் இடிக்கத்தான் செய்கின்றன.

மொத்தத்தில், விளையாட்டை மையமாக வைத்து எப்படி தனியார் தொலைக்காட்சிகளும், கார்பரேட் நிறுவனங்களும் லாபம் ஈட்டுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் ஒரு படம் ‘பூலோகம்’.

– ஃபீனிக்ஸ்தாசன்