Home Featured நாடு “போராட்ட நெருக்கடிகள் மஇகாவைத் தொடர்ந்து பீடித்திருக்கும் நிலைமை” – இராமசாமி மீண்டும் சாடல்!

“போராட்ட நெருக்கடிகள் மஇகாவைத் தொடர்ந்து பீடித்திருக்கும் நிலைமை” – இராமசாமி மீண்டும் சாடல்!

832
0
SHARE
Ad

ramasamyகோலாலம்பூர் – பினாங்கு துணை முதல்வரும் ஜசெகவின் தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் பி.இராமசாமி நேற்று தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வரைந்துள்ள ஒரு கட்டுரையில் மஇகாவை மீண்டும் சாடியிருக்கின்றார்.

எப்போதும் நெருக்கடியில் சிக்கியிருப்பது என்பது மஇகாவைத் தொடர்ந்து பீடித்திருக்கும் நிலைமை என இராமசாமி வர்ணித்திருக்கின்றார்.

அவரது ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது:

#TamilSchoolmychoice

“மஇகா தலைமைத்துவப் போராட்ட நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை என்பதுகூட ஒரு முரண்பாடான கூற்றுதான்.

MIC logoஏனென்றால், அந்தக் கட்சி மற்றக் கட்சிகளைப் போல் அல்லாமல், ஒரு நெருக்கடிக்குப் பின்னர் இன்னொன்று என தொடர்ந்து நெருக்கடிகளால் பீடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இந்த நெருக்கடிகள் எல்லாம் தலைமைத்துவம், அதிகாரம், பதவி, பணம் ஆகியவற்றை மையப்படுத்தியே அரங்கேறி வந்திருக்கின்றன.

மஇகாவின் நெருக்கடிக்கு முடிவு தென்படவில்லை என்று கூறப்படுவதுகூட, சரியான தலைமைத்துவ கலவை, புரிந்துணர்வு மற்றும் இந்தியர்களுக்கு உதவுவதற்கான கடப்பாடு ஆகியவை இருந்தால் கட்சியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியும் மாயமாக மறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புகளை சில தரப்பினர் கொண்டிருப்பதால் கூறப்படுவதாகும்.

தலைமைத்துவப் போராட்ட நெருக்கடி என்பது மஇகா அரசியலில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகும். இதுபோன்ற நெருக்கடி மறைந்துவிடும் என நாம் ஆசைப்படுவது, அந்தக் கட்சியின் 60 ஆண்டுகளைக் கொண்ட கடந்த காலப் பிரச்சனைகளை அறியாததாலும், நமது வெகுளித்தனத்தினாலும் ஏற்படும் ஆசையாகும்.

Tunku and Sambanthanமஇகா என்னும் கட்சியானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்த சம்பவங்களினால் சாதாரண நிலையிலிருந்து உருவான ஒரு கட்சியாகும். இந்தியாவின் காங்கிரஸ் கட்சியை முன்மாதிரியாகக் கொண்டு, வலுவான தேசிய உணர்வுகளோடு மலாயாவில் இருந்த இந்தியர்களைப் பிரதிநிதிக்க உருவான கட்சி இதுவாகும்.

ஆனால், 1950ஆம் ஆண்டுகளில் அலையன்ஸ் எனப்படும் கூட்டணியில் இணைந்தது முதல் அந்தக் கட்சி அதன் முன்னேற்றகரமான அம்சங்களை எல்லாம் இழக்கத் தொடங்கியது. துன் வீ.தி.சம்பந்தன் அந்தக் கட்சியின் தலைவரான பின்னர், மஇகா ஓர் இந்தியர் கட்சியாக அல்லாமல் ஒரு தமிழர் கட்சியாக உருவெடுத்தது.

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் அமைத்ததன் மூலம் கட்சிக்கு சில குறிப்பிடத்தக்க பங்களிப்பை சம்பந்தன் வழங்கினார் என்றாலும் அவருக்குப் பின்னர் மாணிக்கவாசகம் அந்தக் கட்சியின் தேசியத் தலைவரான பின்னர் அந்தக் கட்சி அரசியல் ரீதியாக மக்கிப் போகத்தொடங்கியது.

Tansri_Manickavasagamஅப்போதிலிருந்து சாமிவேலு, பழனிவேலு, தற்போது சுப்ரமணியம் என அடுத்தடுத்த தலைவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஏழ்மையான இந்திய சமுதாயத்தின் நிலையை உயர்த்த மஇகா எதுவுமே செய்யவில்லை. பெரும்பாலான நேரங்களில் மதிப்புமிக்க நேரமும், சக்தியும் தலைமைத்துவப் போராட்டங்களை சமாளிப்பதிலேயே செலவழிக்கப்பட்டது. இந்திய சமுதாயத்திற்காக மிகக் குறைந்த நேரமே இருந்தது.

பழனிவேல் தரப்பினரின் உறுப்பினர்களுடன் இனியும் பேச்சுவார்த்தைகள் இல்லை என்று மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் கூறியிருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம். அமைதி மீண்டும் மஇகாவுக்குத் திரும்பாது.

மஇகா தலைவர்களுக்கும் அடிமட்ட இந்தியர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் அறுந்த நிலையில், இந்திய சமுதாயம் எதிர்நோக்கும், அதிகரித்துவரும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளைக் கவனிப்பதற்கு அந்தக் கட்சியால் எதுவும் செய்யமுடியாது.

Dr-S-Subramaniamகவலையுடன் நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால், கூடிய சீக்கிரத்திலோ, அல்லது பிற்காலத்திலோ இந்தியர்கள் மஇகாவுக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி விட்டு மற்ற அரசியல் சக்திகளுடன் இணைந்து நாட்டின் எதிர்காலத்தில் தங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்வார்கள்.

அம்னோ ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக இருக்கும் வரையில் மஇகா, கெராக்கான், மற்றும் மசீச போன்ற கட்சிகளுக்கு தங்களின் சமூகங்களைப் பிரதிநிதிப்பதற்கான துணிச்சலோ அல்லது சுதந்திரமோ இருக்கப் போவதில்லை.

சுயகௌரவத்துடனும், மரியாதையுடனும், மஇகாவுக்கு நிரந்தரமாக இறுதிப் பிரியாவிடை கொடுத்து அனுப்புவதற்கான நேரம் இந்தியர்களுக்கு இப்போது வந்து விட்டது அல்லவா? இனியும் அந்தக் கட்சி இருக்குமோ அல்லது இல்லாமல் போகுமோ – இந்தியர்களின் எதிர்காலத்தில் எந்தவித மாற்றத்தையும் அது ஏற்படுத்தப்போவதில்லை.

இருந்தாலும், அந்தக் கட்சி இன்னும் கொஞ்ச காலத்திற்கு நிலைத்து இருக்கவேண்டும் என சிலர் விரும்பலாம், இந்தியர்கள் எவ்வாறு பிரதிநிதிக்கப்படக்கூடாது என்பதை ‘உயிருடன்’ இருந்து ஆதாரமாகக் காட்டுவதற்காக!