Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “தற்காப்பு” – ‘என்கவுன்டர்’ பிரச்சனையை இருபக்கமும் அலசல் – காவல் துறைக்கு மரியாதை தரும்!

திரைவிமர்சனம்: “தற்காப்பு” – ‘என்கவுன்டர்’ பிரச்சனையை இருபக்கமும் அலசல் – காவல் துறைக்கு மரியாதை தரும்!

852
0
SHARE
Ad

tharkappu-movie-posterகோலாலம்பூர் – இந்தியாவில், ஏன் மலேசியாவில் கூட காவல் துறையைப் பொறுத்தவரையில் முக்கியமான சர்ச்சைக்குரிய அம்சமாக விவாதிக்கப்படுவது ‘என்கவுன்டர்’ எனப்படும் குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களை விசாரணையின்றி காவல் துறையினர் திட்டமிட்டுக் கொல்லும் பிரச்சனையாகும். அந்தப் பிரச்சனையை எல்லா முனைகளில் இருந்தும் மிக விரிவாக, நுணுக்கமாக அலசுகின்றது ‘தற்காப்பு’.

இதற்கு முன் வந்த தமிழ்ப்படங்களில் சில காட்சிகளாக மட்டுமே வைக்கப்பட்டிருந்த என்கவுன்டர் அம்சம், இந்தப் படத்தில் முழுமையாகப் பேசப்படுவதோடு, மனித உரிமை ஆணையத்தின் கோணத்திலிருந்தும் விவாதிக்கப்படுகின்றது என்பது வித்தியாசமான அணுகுமுறை.

படத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், மலேசியாவின் டாக்டர் எஸ்.செல்வமுத்து என்பவரின் கூட்டுத் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருப்பதுதான். படத்தில் காவல் துறை உயர் அதிகாரியாக சில காட்சிகளில் அவரும் பொருத்தமாகவே நடித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

மற்றொரு சிறப்பம்சம் முதல் முறையாக ஆஸ்ட்ரோவும், டிஜிவி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை மலேசியாவில் வெளியிடுகின்றனர் என்பதாகும்.

கதை-திரைக்கதை

tharkappu_1441021831100ஒரு நாள் அதிகாலையில் 5.00 மணிக்கு பெங்களூர் சாலையின் பேருந்து நிறுத்தம் ஒன்றில் காவல் துறையினர் ஒரு எண்கவுன்டருக்குத் திட்டமிடும் புள்ளியில் இருந்து தொடங்குகின்றது படம்.

படத்தின் கதாநாயகனான போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வாசுவையே என்கவுன்டர் செய்வதற்கு ஏன் போலீசாரே திட்டமிடுகின்றனர் என்பதைப் பின்னோக்கிச் செல்லும் காட்சிகள் (பிளாஷ்பேக்) விவரிக்கின்றன.

அதே வேளையில் இன்னும் இரண்டு கிளைக் கதைகளில் இரண்டு ஜோடி காதலர்கள் வீட்டுக்குத் தெரியாமல் தப்பிச் சென்று திருமணம் புரிவதற்காக அதே நாளில், அதே அதிகாலை நேரத்தில், அதே பேருந்து நிறுத்தத்தில் சந்திப்பதாகச் சொல்ல, அவர்களின் பின்னணிக் கதைகளும் கூறப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் என்கவுன்டர் குறித்த விசாரணையை மேற்கொள்ளும் மனித உரிமை ஆணையர் சமுத்திரகனியின் பின்னணிக் கதையும் கொண்டு வந்து இணைக்கப்படுகின்றது.

இறுதியில் அனைவரும் அதிகாலை 5.00 மணிக்கு அந்த இடத்தில் வந்து சேர, அங்கு என்ன நடக்கின்றது, என்கவுன்டரில் கொல்லப்படுபவர்கள் யார், என்பதையெல்லாம் உச்சகட்டப் பரபரப்போடு சொல்லி முடிக்கின்றது தற்காப்பு.

திரைக்கதையின் பலம்-பலவீனம்

மிகவும் சிரமப்பட்டு, மூளையைக் கசக்கி, முடிந்தவரையில் கடும் உழைப்பை வழங்கி ஒரு வித்தியாசமான திரைக்கதையைத் தர இயக்குநர் முயற்சி செய்திருக்கின்றார்.

ரியாஸ்கானை என்கவுன்டர் செய்ய, சக்திவேல் வாசு யாருடனும் சொல்லாமல் தனியாகத் திட்டமிடுவதும், பின்னர் அதைச் செயல்படுத்தும் காட்சிகளும் படத்தொகுப்பாளரின் கைவண்ணத்தில் பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

இருந்தாலும், சில குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். கதை நடப்பதாக ஒரு நாளையும், நேரத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அடிக்கடி காட்சிகள் பின்னோக்கிச் செல்வதும் பின்னர் முன்னோக்கி வருவதும், அளவுக்கதிகமான கிளைக் கதைகளும் குழப்பங்களை ஏற்படுத்தவே செய்கின்றன.

ஒரு பரபரப்பான என்கவுன்டர் நடக்கப் போகின்றது எனக் காட்டிவிட்டு, இரசிகர்களை அதே பரபரப்பில் வைத்திருக்காமல், இரண்டு காதல் கதைகளை இணைத்திருப்பது, அதைப் பற்றி பின்னோக்கிச் சென்று விரிவாகக் காட்டுவதும், வழக்கமான சினிமாத்தனமாகவும்,  கூடுதல் திணிப்பாகவும் படுகின்றது. ஒரே ஒரு காதல் கதையை மட்டும் இணைத்து, இதைவிடக் கூடுதலாகப் பரபரப்பையும் சுவாரசியத்தையும் காட்டியிருக்க முடியும்.

34824-017என்வுன்டர், மனித உரிமை ஆணையம் என வித்தியாசமான களங்களுக்குள் இரசிகர்களை நுழைத்துவிட்டு, வழக்கமான காதல் காட்சிகளுக்கும், மதம், அந்தஸ்து பிரச்சனைகளால், காதலர்கள் கல்யாணத்துக்கு மறுத்து வீட்டை விட்டு ஓடுவது என்பது போன்ற கதைப் பகுதிகள் படத்தின் சுவாரசியத்தையும், விறுவிறுப்பையும் வெகுவாகக் குறைத்து விட்டன.

இருப்பினும், கதாநாயகனுக்கு, காதல் காட்சிகள் வைக்காமல், பாடல் காட்சிகள் வைக்காமல், (ஒரே ஒரு ஹீரோயிசம் பாடல் மட்டும் உண்டு) திரைக்கதை அமைத்திருக்கும் துணிச்சலுக்கு இயக்குநரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

அதே வேளையில், காதலர்களின் பின்னணிக் கதைகளின் களங்கள் சற்றே வித்தியாசமாக இருந்தாலும், காதலர்களாக நடித்திருக்கும் இரண்டு ஜோடிகளும் சொதப்பி விட்டனர் என்றுதான் கூறவேண்டும்.

இரயிலில் புதிதாக திருமணம் செய்தவர்களுக்கான சிறப்பு முதலிரவு அறையில் நடப்பதான காட்சிகள் புதுசு என்றாலும், இந்திய இரயில்வேயில் இவ்வளவு அற்புதமான அமைப்போடு உண்மையிலேயே ‘ஹனிமூன் கூப்பே’ இருக்கின்றதா அல்லது வெறும் அரங்க அமைப்பா என சந்தேகப்பட வைத்திருக்கின்றார்கள். உண்மையென்றால், விலை என்ன? விசாரிக்க வேண்டும்!

அந்த இரயில் பயணத்தின்போது, தேநீர் விற்கும் பையன் பேசும் வசனங்கள், சிரிக்க வைத்தாலும், வயதுக்கு மீறிய ஆபாசம்!

மற்றொரு காதல் ஜோடியின் கதையில் காதலன், தற்கொலைக்கு முயற்சி செய்வதும் அதன் தொடர்பிலான வசனங்களும் இரசிக்க வைக்கின்றன.

இறுதிக் காட்சியில், துப்பாக்கிச் சூடுகள் கொஞ்சம் நீநீநீநீ…..ளமாகவே போய்க் கொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்துகின்றது.

நடிப்பு

படத்தின் உயிர்நாடி சமுத்திரகனிதான். அண்மையக் காலங்களில் எந்த வேடம் கொடுத்தாலும், தனது தனிக் குரலாலும், வசன உச்சரிப்பாலும், உடல் மொழியாலும் பின்னி எடுத்து விடுகின்றார். இதிலும் அவர் வந்த பிறகுதான் படம் இன்னொரு வகையில் சூடுபிடிக்கின்றது.

Actor Samuthirakani in Tharkappu Movie New Stills

ஆனால், படத்தின் ஆச்சரியப்படத்தக்க முன்னேற்றம் சக்திவேல் வாசு. முதலில் வெளிவந்த படத்தின் முன்னோட்டங்களில் இவரா என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என யோசிக்க வைத்தவர், படம் முழுக்க கடுமையாக உழைத்திருக்கின்றார். நடை,உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டு முடிந்தவரையில் தனது கதாபாத்திரத்திற்கு கம்பீரத்தைச் சேர்த்திருக்கின்றார்.

ஆனால், முன்பே குறிப்பிட்டதுபோல், காதலர்களாக வரும் இரண்டு ஜோடிகளின் நடிப்பு, பாவனைகள் மட்டும் படத்தைக் கொஞ்சம் அமெச்சூர்தனமாக ஆக்கிவிடுகின்றது. அதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவுகளா?

என்வுன்டர் அம்சத்தின் பன்முகங்களையும் ஆராயும் திரைக்கதை பாராட்டப்பட வேண்டும் என்றாலும், இயக்குநர் சொல்லுகின்ற முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இல்லை.

வழக்கம்போல் எல்லா என்கவுன்டர்களும் அரசியல்வாதிகளாலும், பெரிய வர்த்தகர்களாலும்தான் நடத்தப்படுகின்றன என்பதும் அவர்களின் தூண்டுதலாலும், தவறான நோக்கத்திற்காகவும்தான் காவல்துறையினர் என்கவுன்டர்களை மேற்கொள்கின்றார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

tharkappu-movie-stills-33பல என்கவுன்டர்கள் பொதுமக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கின்றன, மக்களாலேயே பாராட்டப்பட்டிருக்கின்றன என்பதும் உண்மைதானே!

இருந்தாலும், இரண்டு பக்கத்திலும் யாருக்கும் யாருடைய உயிரையும் எடுப்பதற்கு அதிகாரமில்லை- அனுமதிக்கக்கூடாது என்பதுதான் இயக்குநரின் இறுதி வாதமாக முடிகின்றது.

திரைக்கதை அமைப்பு – போலீசாரின் என்கவுன்டர் பின்னணியில் என்ன நடக்கின்றன என்பது போன்ற சுவாரசியங்கள் – மனித உரிமை ஆணையத்தின் கண்ணோட்ட விவாதங்கள் – சக்திவேல் வாசு, சமுத்திரகனியின் நடிப்பு – வழக்கமான மசாலா அம்சங்கள் இல்லாத விறுவிறுப்பான கதை நகர்வு – இப்படியாக பல காரணங்களுக்காகக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக அமைகின்றது தற்காப்பு.

அதைவிட முக்கியமாக, நமது மலேசியர் ஒருவர் துணிந்து இத்தகைய கூட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டு தமிழகத்தையும், மலேசியாவையும் இணைக்க முற்பட்டிருக்கும் கலைத் துறை முயற்சியைப் பாராட்டுவதற்காகவும், அந்த நோக்கங்கள் வெற்றியடைவதற்காகவும் நாம் பார்த்து ஆதரவளிக்க வேண்டிய படம் ‘தற்காப்பு’.

-இரா.முத்தரசன்