கோலாலம்பூர் – தொழில்நுட்பக் கருவிகள் பற்றி பேச்சைத் தொடங்கினாலே, இளசுகளின் பேச்சுகள், ஐபோன் பற்றியத் தகவல்கள் இல்லாமல் முற்று பெறுவது இல்லை. ஆப்பிள் அடுத்து எப்போது புதிய ஐபோனை வெளியிடும்? என்ன மாதிரியான மேம்பாடுகள் இருக்கும்? என்பது பற்றி தான் பெரும்பாலும் பேச்சாக இருக்கும்.
இப்படி இருக்க, நம்பகத்தன்மை மிக்க ஊடகங்களில் இருந்து, அடுத்த ஐபோன் பற்றிய ஆருடங்கள் வெளியாகி இருக்கின்றன. ஐபோன் 6சி (6c) என அழைக்கப்படும் அந்த திறன்பேசி, 4 அங்குல அளவில் தயாராகி வருகிறதாம். இளைஞர்களின் தற்போதய விருப்பம், அதிக திறன் உடைய, கைக்கு அடக்கமான திறன்பேசிகள் என்பதை உணர்ந்துள்ள ஆப்பிள், அதனை கருத்தில் கொண்டே 4 அங்குல, ஐபோனை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
2 ஜிபி முதன்மை நினைவகம் (RAM), 16 ஜிபி இரண்டாம் நிலை நினைவகம், அதிகத் திறனுடைய ஏ9 சிப் என பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டதாக, ஐபோன் 6சி இருக்கும் என அந்த ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், தற்போது தொழில்நுட்பக் கருவிகளிடையே உச்சத்தில் இருக்கும் எதிர்பார்ப்பான நீர்ப்புகா (Water Proof) வசதியும் ஐபோன் 6சி-ல் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அநேகமாக வரும் மார்ச் மாதத்தில், இந்த புதிய ஐபோன் வெளியாகலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.