லண்டன் – மும்பையிலிருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில், எலி இருப்பது தெரிய வந்ததால், விமானம் உடனடியாக மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கே திருப்பப்பட்டது.
ஏர் இந்தியா டிரிம்லைனர் விமானம் AI 131, நேற்று 240 பயணிகளுடன் லண்டன் நோக்கி விரைந்து கொண்டு இருந்தது. ஈரான் வான் பரப்பில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தின் உணவு சேவைப் பகுதியில் எலி இருந்ததை பணியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து விதிமுறைகளின் படி, உடனடியாக விமானம் மீண்டும் மும்பை திரும்பியது. பின்னர் பயணிகள் அங்கிருந்து வேறொரு விமானம் மூலம் லண்டன் அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விமானம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
ஏற்கனவே ஏர் இந்தியாவின் விமானச் சேவை மற்றும் பராமரிப்பு குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மேற்கூறிய சம்பவமும் அந்நிறுவனத்தின் நன்மதிப்பில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.