கோலாலம்பூர் – இம்மாதத்தில் இருந்து இனி வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் தேசிய மிருகக்காட்சி சாலை (Zoo Negara) மூடப்படும் என்று அதன் துணைத்தலைவர் ரோஸ்லி @ ரஹ்மாட் அஹ்மட் லானா தெரிவித்துள்ளார்.
கடந்த 52 ஆண்டுகாலமாக, வாரத்தில் எல்லா நாட்களும் செயல்பட்டு வந்த தேசிய மிருகக்காட்சி சாலை, முதல் முறையாக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக ரோஸ்லி தெரிவித்துள்ளார்.
மிருகக்காட்சி சாலையையும், கூண்டுகளையும் சுத்தம் செய்ய இந்த விடுமுறை நாள் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சுமத்ராவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுனாமி என்ற மனிதக்குரங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ரோஸ்லி, “குறைவான ஊழியர்கள் காரணமாக இந்த வார விடுமுறை அவசியமாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், செவ்வாய்கிழமை பொதுவிடுமுறை அல்லது பள்ளி விடுமுறை நாளாக இருக்கும் பட்சத்தில் அன்று மிருகக்காட்சி சாலை செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.