Home Featured வணிகம் 1எம்டிபியின் பண்டார் மலேசியா சொத்துகள் சீனாவின் நிறுவனத்திற்கு விற்கப்படுகின்றன!

1எம்டிபியின் பண்டார் மலேசியா சொத்துகள் சீனாவின் நிறுவனத்திற்கு விற்கப்படுகின்றன!

618
0
SHARE
Ad

1MDB.கோலாலம்பூர் – பிறந்திருக்கும் புத்தாண்டில் 1எம்டிபியின் முக்கிய சொத்து ஒன்று, ‘சீனா ரயில்வே என்ஜினியரிங் கொர்ப்பரேஷன் சென்டிரியான் பெர்ஹாட்’ (China Railway Engineering Corporation Sdn Bhd – CREC) என்ற சீன நாட்டின் நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருப்பது மீண்டும் சில சர்ச்சைக்குரிய விவாதங்களைத் தோற்றுவித்திருக்கின்றது.

தலைநகரின் தலையாய வணிக மையமான புக்கிட் பிந்தாங்கை அடுத்துள்ள 486 ஏக்கர் அரசாங்க நிலத்தை, 2013இல் 400 மில்லியன் ரிங்கிட் கொடுத்து அரசாங்கத்திடம் இருந்து பெற்றது, 1 எம்டிபி. தற்போது அந்த நிலத்தின் மதிப்பு 4.2 பில்லியன் ரிங்கிட் என 1 எம்டிபி நிறுவனத்தின் கணக்குகளில் காட்டப்பட்டிருக்கின்றது.

China_Railway_Construction_Corporation_Logo.அந்த நிலத்தில் பண்டார் மலேசியா என்ற புதிக நகர் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரை இணைக்கும் அதிவிரைவு இரயில் முனையமாக இந்நகர் செயல்படும் என்றும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் எம்ஆர்டி இரயில் திட்டத்திற்கான முக்கிய இரயில்வே நிலையங்களையும், மற்றும் எல்ஆர்டி இரயில் நிலையங்களையும் இந்த பண்டார் மலேசியா திட்டம் கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

தற்போது அந்த திட்டத்தின் உரிமையாளரான பண்டார் மலேசியா சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் 60% பங்குகள் 7.41 பில்லியன் ரிங்கிட்டுக்கு சீனா ரயில்வே என்ஜினியரிங் நிறுவனமும் இஸ்கண்டார் வாட்டர்ஃபிரண்ட் நிறுவனமும் இணைந்த ஒரு கூட்டு நிறுவனத்திடம்  விற்கப்பட்டிருக்கின்றது. இந்த விற்பனையின் மூலம் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 12.35 பில்லியன் ரிங்கிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பண்டார் மலேசியா திட்டத்தின் 40 சதவீதப் பங்குகளை 1 எம்டிபி தொடர்ந்து தன் கைவசம் வைத்திருக்கும்.

நாட்டின் சொத்துகள் சீனர்களுக்கு விற்கப்படுகின்றனவா?

சீனர்களுக்கு எதிராக எப்போதும் முழங்கி வரும் அம்னோ கட்சியின் தலைவராக இருக்கும் நஜிப், தனது ஆளுமையின் கீழ் உள்ள 1எம்டிபியின் சொத்துகளை சீன நிறுவனத்திற்கு விற்றுள்ளது அம்னோவிலும் பல சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Arul-Kandasamyமே 29ஆம் தேதி 1எம்டிபி நிறுவனத்தின் தலைவர் அருள் கந்தா (படம்) அமைச்சரவைக்கு வழங்கிய 6 மாத சீர்திருத்தத் திட்டத்தின்படி, இந்த சொத்துகள் விற்கப்படுகின்றன.

பண்டார் மலேசியாவின் 60 சதவீதப் பங்குகளை இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டாக வாங்கியுள்ளன. இந்த கூட்டு நிறுவனத்தில் சீனா இரயில்வே என்ஜினியரிங் 60 சதவீதமும், இஸ்கண்டார் வாட்டர்ஃபிரண்ட் 40 சதவீதமும் கொண்டிருக்கும்.

இஸ்கண்டார் வாட்டர்ஃபிரண்ட் ஹோல்டிங்க்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் 40 சதவீதப் பங்குகளை ஜோகூர் மாநில அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை டான்ஸ்ரீ லிம் காங் ஹூ என்ற சீன வணிகர் கொண்டிருக்கின்றார்.

ஆக, 1எம்டிபியின் நிதிப் பிரச்சனைகளைத் தீர்க்க நஜிப் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் மற்றும் உள்நாட்டு சீன வணிகர்களிடம் நாட்டின் முக்கிய சொத்துகளை விற்றிருக்கின்றார் என்ற குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன.

இருப்பினும், 1எம்டிபி மூலம் மத்திய அரசாங்கமும், இஸ்கண்டார் வாட்டர்ஃபிரண்ட் நிறுவனத்தின் மூலம் ஜோகூர் அரசாங்கமும் பண்டார் மலேசியா திட்டத்தின் பெரும்பான்மையை அதாவது 54 சதவீதத்தை கொண்டிருக்கின்றன என அருள் கந்தா விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

இருந்தாலும், பண்டார் மலேசியாவின் பங்குகள் விற்பனை காரணத்தால், 1 எம்டிபி மீதான விவாதங்களும், சர்ச்சைகளும் வேறு ஒரு புதிய கோணத்தில், தொடர்ந்து விவாதிக்கப்பட தற்போது வாயில்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றன என பார்வையாளர்கள் கருதுகின்றார்கள்.

-செல்லியல் தொகுப்பு