ஜோர்ஜ் டவுன் – மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சபையின் பினாங்கு மாநிலக் கிளையினர், அதன் தலைவர் டத்தோ என்.வசந்தராஜன் தலைமையில் நேற்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கையும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
லிம் குவான் எங்கிற்கு மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கும் பினாங்கு இந்திய வர்த்தக சபைத் தலைவர் டத்தோ என்.வசந்தராஜன்..
இந்த சந்திப்பின்போது பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியும் உடனிருந்தார். மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜக்டிப் சிங் டியோவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
லிம் குவான் முதல்வராகப் பதவியேற்றது முதல் கடந்த 7 ஆண்டுகளில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கண்டு தாங்கள் பெருமிதம் கொள்வதாகவும், லிம்முக்கும் அவரது குழுவினருக்குமான தங்களின் ஆதரவைத் தொடர்ந்து தெரிவிப்பதாகவும், பினாங்கு வர்த்தக சபையினர் இந்த சந்திப்பின்போது தெரிவித்தனர்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, லிம் குவான் எங், புதிய ஆண்டில் பினாங்கு மாநிலத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் திட்டங்கள் குறித்தும் குறிப்பாக பினாங்கு போக்குவரத்து திட்டம் குறித்து விளக்கங்கள் வழங்கினார்.
பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, அபரிதமான பங்களிப்பு வழங்கி வந்திருக்கும் இந்திய வணிகர்களின் நலன்கள் குறித்து தான் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் குறித்தும் லிம் குவான் எங் இந்த சந்திப்பின் போது விவரித்தார்.