ரியாத் – ஈரான் நாட்டுடனான தூதரக உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் நட்பு நாடுகளான சூடான், பஹ்ரெயின் ஆகியவையும் தங்களின் தூதரகங்களை மீட்டுக் கொண்டுள்ளன.
ஈரானிய ஷியாட் மதகுரு தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஈராக்கிலும், சவுதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன…
சவுதி, ஈரான் சர்ச்சையைத் தொடர்ந்து மேலும் சில சவுதி ஆதரவு நாடுகள் சில தங்களின் தூதரகத் தகுதிகளை தரம் குறைத்துக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையில் தூதரக உறவுகள் கசப்பான நிலையை அடைந்தால், அவை தங்களின் தூதரக தரத்தைக் குறைத்துக் கொள்வது அனைத்துலக அரசியலில் வழக்கமாகும். உதாரணமாக, இரு நாடுகளும் தலா பத்து பேரை தூதரக பணியாளர்களாக வைத்திருந்தால் அந்த எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும் வகையில் சிலரை தங்கள் நாட்டுக்கே மீட்டுக் கொள்வார்கள்.
தூக்கிலிடப்பட்ட மதகுரு அல் நிமிரின் புகைப்படத்துடன் ஈராக்கில் சவுதிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்…
அந்த வகையில் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகள் தங்களின் தூதரக தகுதியைக் குறைத்துக் கொள்ளும் தங்களின் தூதரை ஈரானிலிருந்து மீட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் ஈரானுக்கும் சவதி அரேபியாவுக்கும் இடையிலான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.