கௌஹாத்தி/இம்பால் – இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் வட்டாரங்களில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 9 பேர் வரை உயிரிழந்ததாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6.7 புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று காலை 4.36 மணியளவில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளைத் தாக்கியது.
மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் சேதங்கள்…
இதனைத் தொடர்ந்து சேதங்களைப் பார்வையிட உள்துறை துணை அமைச்சரான கிர்ரன் ரிஜ்ஜூ மற்றும் மத்திய அமைச்சரவையின் மற்றொரு அமைச்சரான ஜிதேந்திரா சிங் மணிப்பூர் சென்றுள்ளனர். அங்கு, மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை அவர்கள் சந்தித்து நிலவரங்களைக் கேட்டறிந்தனர்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி, அசாமில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியதாகவும், நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள நிலைமையை மேற்பார்வையிட அவரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும்படி பணிக்கப்பட்டுள்ளதாகவும் மோடி மேலும் தெரிவித்திருக்கின்றார்.
அருணாச்சல பிரதேச முதல்வர் நபாம் துக்கியுடனும் தான் தொலைபேசி வழி பேசியிருப்பதாகவும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.