Home One Line P2 அசாமில் குடிமக்கள் பதிவு குறித்து இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்

அசாமில் குடிமக்கள் பதிவு குறித்து இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்

870
0
SHARE
Ad

புதுடில்லி – (அண்மையில் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவு பல்வேறு ஊடகச் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அவற்றுக்கு விளக்கம் தரும் வகையில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் அதிகாரத்துவ செய்தித் தொடர்பாளர் ரவிஷ்குமார் வெளியிட்ட அறிக்கையின் தமிழ் வடிவத்தை கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை பின்வருமாறு:

1. ஆகஸ்ட் 21, 2019 வரையிலான அசாம் குடிமக்கள் பதிவு குறித்த இறுதி செய்தி அறிக்கை ஒன்றை மாநில ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

2. அப்போதிலிருந்து, வெளிநாட்டு ஊடகங்களில் இதுகுறித்த தவறான செய்திகள் வெளிவருகின்றன.

#TamilSchoolmychoice

3. ஆகையால், எனது தெளிவுரையை இதன் பின்னணியுடன் தொடங்குகிறேன். 1985-இல் இந்திய அரசாங்கம் அசாம் குடிமக்களின் நலன்களை பாதுகாக்கும் உறுதிமொழி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் உட்பட அசாம் மாநில அரசு, அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஏஏஎஸ்யு) மற்றும் அனைத்து அசாம் கன் சங்கரம் பரிஷட்டும் (ஏஏஜிஎஸ்பி) கையெழுத்திட்டன. இதில் இந்திய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய கூட்டரசு நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த முடிவு 2015 இல் அசாமில் குடிமக்களின் பதிவேட்டை புதுப்பிக்கும் செயல்முறைக்கு வழிவகுத்தது.

4. என்.ஆர்.சி புதுப்பிப்பு என்பது இந்திய கூட்டரசு நீதிமன்றததால் நியமிக்கப்பட்ட ஒரு வெளிப்படையான மற்றும் சட்டப்பூர்வமான செயல்முறையாகும். இது ஒரு நிர்வாகத்தால் இயக்கப்படும் செயல் அல்ல. இச்செயல்முறை இந்திய கூட்டரசு நீதிமன்றத்தால் நேரடியாக கண்காணிக்கப்படுவதோடு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அரசாங்கம் செயல்படுகிறது. இதுவரை எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் காலக்கெடுவை இந்திய உச்ச நீதிமன்றமே நிர்ணயித்தது.

5. என்.ஆர்.சி அறிவியல் பூர்வமான ஒரு நேர்மையான செயல்முறையாகும். என்.ஆர்.சி செயல்முறை தனித்துவமிக்கது, காரணம் இச்செயல்முறை வீட்டுக்கு வீடு கணக்கியல் முறையில் இல்லாமல் விண்ணப்ப முறையில் அமைந்திருக்கும். அதாவது, அசாமில் உள்ள யார் வேண்டுமானாலும் தன்னை இந்தப் பட்டியலில் இணைத்து கொள்ள போதிய ஆவணங்களை அல்லது மார்ச் 24, 1971 முதல் அங்கு நிரந்தரமாக வசிப்பதை உறுதிபடுத்தும் ஆவணத்தை சமர்ப்பித்தால் போதும்.

6. இது ஒரு பாகுபாடற்ற செயல், அதாவது அநீதிக்கும் ஓரவஞ்சனைக்கும் இடமளிக்காது. என்.ஆர்.சி பாரத்தில் விண்ணப்பதாரரின் மதம் குறித்த தகவல்களைக் கோரும் பகுதியே இல்லை.

7. இந்தப் பட்டியலிலிருந்து யாரேனும் விடுபட்டிருந்தால் அறிவிப்பு வெளியிட்ட 120 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்வதற்கு உரிமை உண்டு. மேல் முறையீடு செய்த அனைத்து வழக்குகளும் தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்படும். நீதிமன்ற செயல்முறை அனைத்து மேல் முறையீடு தவணை முடிவடைந்த பிறகு தொடங்கும். அதன்பிறகு கிடைக்கும் முடிவுகள் திருப்தி அளிக்காவிடில் அந்நபர் அசாம் உயர் நீதிமன்றம் பின்னர் கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யலாம்.

8. என்.ஆர்.சி யில் விலக்கு என்பது அசாமில் வசிக்கும் தனிநபரின் உரிமைகளுக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இறுதிப் பட்டியலில் இடம் பெறாத நபர்கள் எந்த வகையிலும் தடுப்புக் காவலில் வைக்கப்படமாட்டார்கள், அதே சமயம் முன்பு போல் அனைத்து உரிமைகளும் கொண்டிருப்பார்கள். மேலும், சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து சலுகைகளையும் பெறுவார்கள். ஆகையால், விலக்கப்பட்ட நபர் ‘குடிமகன் அல்லாதவர்’ எனப்படுவதில்லை. சட்டத்தின் அடிப்படையில் ஓர் ‘அந்நியன்’ ஆக்குவதில்லை. அதுமட்டுமில்லாமல் ஒரு காலக்கட்டத்தில் அவர்கள் பெற்ற எந்த உரிமைகளையும் ஒருபோதும் இழக்க மாட்டார்கள்.

9. இந்திய அரசு மேல் முறையீட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கும் வழிகாட்டி உதவுகிறது. அரசு, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மூலம், தேவைப்படுவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கியுள்ளது. அசாம் மாநிலம் பட்டியலிலிருந்து விலக்கு பெற்ற நபர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை வழங்கியுள்ளது. பின்தங்கிய பொது மக்களுக்கு இந்த சட்ட உதவி பெருந்துணையாக உள்ளது.

10. விண்ணப்பங்கள் பெறுவதை விரைவுபடுத்தும் செயல்முறைக்காக மாநில அரசு தற்போது 100 தீர்ப்பாயங்களை 200 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்கள் டிசம்பர் 2019-க்குள் அசாம் மாநிலத்தில் அமைக்கப்படும். இந்த தீர்ப்பாயங்கள் மேல் முறையீட்டாளர்களின் வசதிக்கேற்ப அமைக்கப்படும்.

11. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது அரசியலமைப்பில் “அனைவருக்கும் சம உரிமைகளை” பராமரித்து, சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறது. ஒரு சுயாதீன நீதித்துறை மற்றும் ஒரு முழுமையான தன்னாட்சி அரசு துறை என்ற வகையில், மனித உரிமைகளைப் பாதுகாப்பது நமது அரசியல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். என்.ஆர்.சி அமலாக்க செயல்பாட்டின் போது எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் இந்திய சட்டத்தின் நான்கு மூலைகளிலும், இந்திய ஜனநாயக மரபுக்கு இசைவானதாகவும் இருக்கும்.