கோலாலம்பூர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா இரத்து செய்தது மற்றும் இராணுவ வீரர்களை அப்பகுதியில் நிறுத்தியதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு மஸ்ஜித் நெகாராவில் சுமார் 100 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் “ஹிடூப் காஷ்மீர்” (காஷ்மீர் வாழ்க) என்று கோஷமிட்டும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நீக்கவும் கோரினர்.
காஷ்மீரில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று ஆர்ப்பாட்டக் குழுவின் தலைவர் மற்றும் முஸ்லிம் இளைஞர் இயக்கத்தின் (அபிம்) தலைவருமான முகமட் ரைமி ராகிம் வலியுறுத்தினார்.
“ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருக்கிறார்கள்? இங்கிலாந்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் பத்திரிகைகளுக்கு தெரிவித்தார்.
40 அரசு சாரா அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அபிம், பின்னர் இந்திய தூதரகத்தில் ஓர் எதிர்ப்பு மனுவை சமர்ப்பித்தனர்.
மேலும், 20 எதிர்ப்பாளர்கள் அடங்கிய மற்றொரு குழு, ஐக்கிய அரபு சிற்றரசு (யுஏஇ) தூதரகத்தின் முன்கூடி, அந்நாட்டின் மிக உயர்ந்த விருதான, ஆர்டர் ஆஃப் சாயீட் எனும் விருதினை மோடிக்கு வழங்குவதற்கான அந்நாட்டின் முடிவை எதிர்த்தது.
காஷ்மீர் “மற்றொரு பாலஸ்தீனம்” ஆவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மலேசியர்கள் கவலை கொண்டுள்ளனர் என்று ஆர்ப்பாட்டக் குழுத் தலைவரும், இகாத்தான் ராக்யாத் முஸ்லிம் மலேசியாவின் (இரிம்) தலைவருமான அமீர் அம்சா அல்லா பிச்சை தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், ஐக்கிய அரபு சிற்றரசு தூதரகத்திற்கு 42 அமைப்புகள் கையெழுத்திட்ட ஓர் எதிர்ப்பு மனுவை சமர்ப்பிக்க முயன்றனர், ஆனால் தூதரக ஊழியர்கள் யாரும் அதனை ஏற்கவில்லை.