கோலாலம்பூர் – புக்கிட் காசிங் மலையேற்றத்தில் ஈடுபவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது அண்மைய வழிப்பறி சம்பவங்கள்.
இந்த வாரத்தில் மட்டும் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போது அப்பகுதிக்கு செல்லும் மலையேற்ற வீரர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, வலைப்பதிவாளர் ரெபக்கா சா தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டுவிட்டு காலை 8 மணியளவில் கீழே இறங்கிய போது, அவரைத் தடுத்து நிறுத்திய இரு வழிப்பறிக் கொள்ளையர்கள், அவரது ஐபோனை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அவர்களிடமிருந்து போராடி தன்னுடைய ஐபோனைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய ரெபக்காவை தலையில் அடித்து, கழுத்தைத் திருகி சரிவில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் முதுகில் சிறாய்ப்புக் காயங்களுடன் தப்பித்துள்ளார் ரெபக்கா.
இந்தச் சம்பவம் நடந்து அடுத்து 50 நிமிடங்களில், அப்பகுதியில் தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்ட 51 வயதான பெண் ஒருவர், மலையேற்றம் முடித்துவிட்டு தனது காருக்கு வந்த போது மர்ம நபர் ஒருவரால், துப்பாக்கி கொண்டு மிரட்டப்பட்டார்.
சுமார் 1 மணி நேரம், காருக்குள் அமர்ந்து கொண்டு அப்பெண்ணிடம் துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி நகரின் பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற அக்கொள்ளையன், அப்பெண்ணிடம் அவரை விடுவிக்க பிணைத் தொகையாக 150,000 ரிங்கிட் கேட்டுள்ளான். அப்பெண் தன்னிடம் அவ்வளவு காசு இல்லை என்று கூறியவுடன், அவரை நியூ பந்தாய் எக்பிரஸ்வே நெடுஞ்சாலை அருகே இறக்கி விட்டுவிட்டு, காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.