நியூ யார்க் – அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புது வருடம் பிறந்துவிட்டது. இனி சாகசப் பயணிகள் அடுத்தடுத்து தங்களது பயணத்தை துவக்க ஆரம்பித்துவிடுவர். அவர்களின் எண்ணத்திற்காக ‘நியூ யார்க் டைம்ஸ்’ 2016-ல் உலக அளவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மெக்சிகோ, பிரான்சின் போர்டியாக்ஸ் நகரம், மத்திய தரைக்கடல் பகுதியின் மால்டா, செயின்ட் ஜானின் கோரல் பே, கனடாவின் டொரண்டோ உள்ளிட்ட 52 நகரங்கள் ‘நியூ யார்க் டைம்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதில் ஆச்சரியப்படும் விதமாக தமிழ்நாடு, அமெரிக்காவின் வாஷிங்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரங்களை பின்னுக்குத் தள்ளி, 24-வது இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு பற்றி அந்தப் பட்டியலில் குறிப்பிடுகையில், “வட இந்தியாவில், மொகலாய அரசுகள் உருவாக்கிய கோட்டைகளும், மாளிகைகளும் இருக்கின்றன. ஆனால், தெற்கே இருக்கும் தமிழ்நாடும், சம அளவிலான பாரம்பரியம் மிக்கது. தமிழகத்தில் உள்ள கோயில்கள் பழமை வாய்ந்தவையாகவும், கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகின்றன. தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் செட்டிநாடு பகுதியில் உள்ள 18-ம் நூற்றாண்டு சிறந்த கட்டிடங்கள் என பல பெருமைகள் தமிழகத்தில் உள்ளன. கண்டிப்பாக தமிழகம் இந்தியாவில் பார்க்க வேண்டிய முக்கியப் பகுதியாகும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய அளவில் தமிழகம் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது மற்றொரு ஆச்சரியமாகும்.