பெட்டாலிங் ஜெயா – புக்கிட் காசிங் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் படி, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யகரண் பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலம்பூர் காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் நடந்த இரு வழிப்பறி சம்பவங்களால், அப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
வலைப்பதிவாளர் ரெபெக்கா சாவின் கைப்பேசியைப் பறித்த கொள்ளையர்கள் அவரைத் தாக்கியதோடு, அடுத்ததாக 51 வயதான பெண் ஒருவரின் காரையும் திருடிச் சென்றனர்.
(வழிப்பறிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வலைப்பதிவாளர் ரெபக்கா சா)
இது குறித்து ராஜிவ் கூறுகையில், அண்மைய காலமாக அங்கு காவல்துறையினரின் வருகை குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இரண்டறை ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு நடந்த வழிப்பறிக் கொள்ளை சம்பவம் ஒன்றில், கொள்ளையர்களிடமிருந்து தன்னுடைய மகளைக் காப்பாற்ற போராடிய 52 வயதான தாய் ஒருவர் உயிரிழந்தார்.
அதைச் சுட்டிக் காட்டிய ராஜிவ், “இரண்டறை ஆண்டுகளுக்கு முன், அங்கு ஒருவரைக் கொலை செய்துவிட்டனர். அப்போது சில நாட்கள் காவல்துறை பாதுகாப்பில் இருந்தது. ஆனால் அதோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைந்துவிட்டன” என்றும் ராஜிவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் எனத் தான் நம்புவதாகவும் ராஜிவ் குறிப்பிட்டுள்ளார்.