சென்னை – ஜல்லிக்கட்டுவை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் 22-ம் தேதி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே கடிதம் மூலம் தான் கேட்டுக் கொண்டிருந்ததாக, ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு இன்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கடந்த 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் உற்சாகம் ஒரு பக்கம் இருந்தாலும், விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து, ஜல்லிக்கட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.
மத்திய அரசாங்கத்தின் அறிவிப்பு அடிப்படையில், ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டங்களில் மும்முரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட அறிவிப்புக்கு இன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ஜல்லிக்கட்டு போட்டியுடன் நெருக்கமான தொடர்புடைய தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பது அவசியம். எனவே, இப்பிரச்சினையின் அவசரத்தை உணர்ந்து, உடனடியாக மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழக மக்கள் சார்பாக இந்த விவகாரத்தில் தங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்” என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.