இடிந்தரை – தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் கடல் பகுதியில் நேற்று திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின. அதேபோல் அணுஉலை இருக்கும் இடிந்தகரை பகுதியில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கூடங்குளம் அணு உலை எதிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் 50 முதல் 300 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. கூடங்குளம் அணு உலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். ஜனவரி 11-ம் தேதி இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறிய ரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும், “அங்கே (கூடங்குளம்) என்ன நடக்கிறது என்பதே மர்மமாக இருக்கிறது. மக்களிடம் உண்மையை தெரிவிக்க மறுக்கிறார்கள். கடந்த 6 மாதத்துக்கும் மேலாக அணு உலை இயங்காமல் கிடக்கிறது என்கிறார்கள். ஆனால், ஏதோ சோதனைகளை நடத்துவதாக அறிகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.