புகுஷிமா: ஜப்பானில் 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பல்லாயிரம் உயிர்கள் பறிபோனதோடு, பல்லாயிரக்கணக்கான சொத்துகள் சேதமடைந்தன. சேதம் அடைந்த புகுஷிமா அணு உலையில், அணுக்கதிர் பொருட்களை கையாள, தற்போது மனித இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
9.0 என்ற ரிக்டர் அளவில் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கத்தினால் உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.
மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளைக் குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் கண்டன.
சுற்றியுள்ளப் பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கத் தொடங்கியதால், உலையைக் குளிர்விக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. ஆனால், எவ்வளவு முயற்சித்தும் கதிர்வீச்சின் தாக்கத்தை சிறிதளவு குறைக்க முடிந்ததே தவிர, முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு வசித்த 45,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த அணு உலை விபத்து ஏற்பட்டு எட்டு ஆண்டுகளைக் கடந்து விட்டாலும் உலையிலிருந்து கேசியம் – 137 எனும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் பசிபிக் பெருங்கடலில் பல இடங்களில் இன்னமும் இருக்கிறது.
தற்போது, அங்குள்ள பொருட்களை, அகற்றலாமா இல்லையா என்பதை அறியும் முயற்சியில், இந்த மனித இயந்திரங்கள் அனுப்பப்பட உள்ளன. அந்த தலத்தை சீர்படுத்த இன்னும் நாற்பது ஆண்டுகள் வரை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.