Home Featured தமிழ் நாடு “மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட்டிருக்க வேண்டும்” – சோ.ராமசாமி கூறுகிறார்!

“மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட்டிருக்க வேண்டும்” – சோ.ராமசாமி கூறுகிறார்!

823
0
SHARE
Ad

cho-ramaswamy-சென்னை- கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த துக்ளக் இதழின் ஆசிரியரும், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டவருமான சோ ராமசாமி (படம்), மீண்டும் குணமடைந்து, நேற்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

தள்ளாத உடல் நிலையிலும், தன் இதயத்துக்கு மிக நெருக்கமான நிகழ்ச்சியான துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சோ வழக்கம் போல் தனக்கே உரிய வகையில் அரசியல் கருத்துகளை உதிர்த்துள்ளார்.

வழக்கமாக திமுகவுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் சோ இந்த நிகழ்ச்சியில் பேசும்போது “தமிழகத்தில் குடும்ப ஆட்சி போனதற்கு அதிமுகதான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. திமுக ஆட்சியில் சினிமா, அரசியல் என அனைத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்றது. மூத்த மகன், இளைய மகன், பேரன், பேத்தி என ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் அதிகாரமிக்கவர்களாக இருந்து வந்தனர். அந்த நிலை இப்போது இல்லை. அதுவே பெரிய மாற்றம். அந்தக் குடும்ப ஆட்சி மீண்டும் வந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கருணாநிதி-ஸ்டாலின் பற்றியும் குறிப்பிட்ட சோ “ஸ்டாலின் அரசியலில் திணிக்கப்பட்டவர் இல்லை. நெருக்கடி நிலையைச் சந்தித்தவர். அதிலிருந்து அவரின் அரசியல் பயணம் தொடங்குகிறது. அதனால் ஸ்டாலினிடம் தலைமையைக் கொடுப்பதை விடுத்து, தன்னிடம்தான் ஆட்சி தங்க வேண்டும் என்று கருணாநிதி நினைப்பது சரியில்லை. இதனால் திமுக வாக்குகள் சிதறி, ஆளும்கட்சிக்கு சாதகமாக அமையும். அப்படி அமைய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

துக்ளக் ஆண்டு விழாவில் ஆர்.சரத்குமார், பாரதிய ஜனதாவின் பொன்.இராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

துக்ளக் ஆண்டு விழாவில் சோ தெரிவித்த கருத்துகளை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=1DtLe92AzCI&app=desktop