Home Featured நாடு “கைதானவர் மலேசியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார்” – காலிட் அதிர்ச்சித் தகவல்!

“கைதானவர் மலேசியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார்” – காலிட் அதிர்ச்சித் தகவல்!

555
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – நேற்று புக்கிட் அம்மான் தீவிரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தொடர்புடைய நபர், மலேசியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து தனது செயல்பாடுகளுக்கான கட்டளைகளை அந்நபர் பெற்றுக் கொண்டிருந்ததாகவும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இன்று மதியம் காலிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஎஸ் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்நபர், மலேசியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன், சிரியா ஐஎஸ்-ன் கட்டளைக்காகக் காத்துக்கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

28 வயதான அந்நபர் ஒரு மலேசியர் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஐஎஸ் அமைப்புக்கு எதிராகத் தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மலேசியக் காவல்துறையை எச்சரிக்கும் விதமாக, திரெங்கானு, பேராக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் ஐஎஸ் கொடியை நட்டவரும் அந்நபர் தான்” என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை காலிட் தனது டுவிட்டர் பக்கத்தில், சந்தேகிக்கப்படும் ஐஎஸ் நபர் அம்பாங்கில் கைது செய்யப்பட்ட தகவலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த ஜனவரி 11-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஐஎஸ் அமைப்பில் தொடர்புடையதாக நம்பப்பட்ட மூன்று மலேசியர்கள் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக மலேசியாவில் இருந்து துருக்கி சென்ற போது, கடந்த நவம்பர் 15-ம் தேதி, துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் மூவரும் நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரையும் ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக அழைத்தது, ஏற்கனவே சிரியா ஐஎஸ் அமைப்பில் இருக்கும் முகமட் வாண்டி மொகமட் ஜெடி என்ற மலேசியர் தான் என்பதையும் காலிட் வெளியிட்டுள்ளார்.